கல்வி மறுசீரமைப்புகளை எதிர்க்கட்சியினர் தவறாக அர்த்தப்படுத்த வேண்டாம்...
அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களையோ அல்லது வேறு எந்தவொரு தரப்பினரையோ ஒடுக்குவதற்கு அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பெப்ரவரி 06ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
’ டிட்வா’ சூறாவளி காரணமாக அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
டிட்வா சூறாவளி காரணமாக இந்நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகளை அனைவரும் நன்கு அறிவர். நாம் எதிர்பாராத வகையில் எமது நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளான வீதிகள், பாலங்கள் ஆகியவற்றுக்கு எந்த அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை. பல பாடசாலைகளையும், வீடுகளையும் நாம் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியுள்ளதுடன், சிலவற்றை இருக்கும் இடங்களிலிருந்து அகற்ற வேண்டியும் உள்ளது. அத்துடன், இதுவரை வரலாற்றில் கண்டிராத அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை சுமார் 1300 நிலச்சரிவுகள் குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளது.
எனவே, கௌரவ சபைத் தலைவரே, இந்த நிலைமைகளின் கீழ் நாம் துரிதமாகத் தலையீடுகளைச் செய்ய வேண்டியுள்ளது. அந்தத் தலையீடுகளுக்காக வளங்களைத் திரட்ட வேண்டியுள்ளது. மனித வளம் மற்றும் தேவையான ஏனைய பொருட்கள் என அனைத்தையும் மிக விரைவாகத் திரட்டிச் செயற்படுத்துவதற்கும், இயல்பு நிலையை மீளக் கொண்டு வருவதற்கும், ஏற்பட்ட பாதிப்புகளைக் குறைப்பதற்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எமக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது.
இந்த அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய அவசியம் இந்தச் சூழலின் அடிப்படையிலேயே எழுகின்றது. அத்தியாவசிய சேவைகளைப் பேண முடிவதும், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தை நியமிப்பதையுமே இதன் மூலம் நாம் எதிர்பார்க்கின்றோம். இந்த இரண்டு பிரதான விடயங்களுக்காகவே நாம் இச்சட்டத்தைப் பயன்படுத்துகின்றோம். ஏற்பட்டுள்ள நிலைமையின் கீழ் செய்ய வேண்டியவற்றை வினைத்திறனாகவும் மிக வேகமாகவும் முன்னெடுத்து, மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் தேவையைக் கருத்திற்கொண்டே இச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்காகக் கௌரவ பாராளுமன்றத்தில் இதனைச் சமர்ப்பித்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
அத்துடன், ஆதாரமற்ற தகவல்களை வெளியிடுவது எதிர்க்கட்சியின் பழக்கமாக மாறியுள்ளதாகவும், எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் இவ்வாறான கருத்துகளை வெளியிடுவது கவலைக்குரிய விடயம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதற்குத் திருகோணமலையில் பிக்குகள் தொடர்பான சம்பவத்தை உதாரணமாகக் காட்டிய பிரதமர், அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய கைதுகள் அவசரகாலச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக எதிர்க்கட்சியினர் கூறியபோதிலும், அந்தச் சம்பவ தொடர்பான சட்ட நடவடிக்கைகள் சாதாரண சட்டத்தின் கீழேயே முன்னெடுக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டினார். அவசரகாலச் சட்டத்தின் கீழ் எவற்றைச் செய்ய முடியும் என்பதற்குப் பதிலாக, அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை எதற்காகப் பயன்படுத்தியது என்பதே இந்த விவாதத்தில் ஆராயப்பட வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் ஒருபோதும் அவசரகாலச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊடகங்களையோ அல்லது எந்தவொரு மக்கள் போராட்டத்தையோ ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அரசாங்கத்தின் தலையீட்டுடன் அவ்வாறான ஒடுக்குமுறைகள் இடம்பெற்றிருப்பின் அந்தச் சம்பவங்களைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டுமாறும் பிரதமர் சவால் விடுத்தார்.
கல்வி மறுசீரமைப்பு தொடர்பான எதிர்க்கட்சியின் கருத்துகள் குறித்துப் பேசிய பிரதமர், கல்வி மறுசீரமைப்புகளைச் செயற்படுத்தும் போதும் ஏற்பட்ட நெருக்கடிகளின் போதும் அரசாங்கம் ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாகத் தலையீடுகளைச் செய்துள்ள நிலையில், அது குறித்துச் சமூகத்தில் ஒரு குழப்பமான நிலையை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சி வெளிப்படுத்தும் இரட்டை வேட நிலைப்பாட்டைக் கேள்விக்குட்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
கல்வி மறுசீரமைப்பு என்பது 6ஆம் தரத்தின் கற்றல் தொகுதிகளுக்கு (Modules) அப்பாற்பட்ட ஒரு செயல்முறை என்பதால், இந்த மறுசீரமைப்புகளை எவ்விதத்திலும் தவறாக அர்த்தப்படுத்த வேண்டாம் எனப் பிரதமர் எதிர்க்கட்சியினரிடம் கேட்டுக்கொண்டார். மறுசீரமைப்பு தொடர்பான ஐந்து தலைப்புகளின் கீழ் முன்னெடுக்கப்படும் பணிகள் அவ்வாறே தொடர்வதாகவும், மறுசீரமைப்புகள் இடைநிறுத்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்த பிரதமர், சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகளை வழங்கும் பணிகளில் கடந்த இரண்டு மாத கால முன்னேற்றம் பற்றிய விபரத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதன்படி, பெப்ரவரி 02ஆம் திகதி வரை பிள்ளைகளுக்காக வழங்கப்படும் 15,000 ரூபா கொடுப்பனவு இதுவரையில் 72 சதவீதமானோருக்கும், மரண இழப்பீடுகள் 50 சதவீதமானோருக்கும், 50,000 ரூபா கொடுப்பனவு 77 சதவீதமானோருக்கும் மற்றும் 25,000 ரூபா கொடுப்பனவு 98 சதவீதமானோருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு