பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட வெளிநாட்டு அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் என்பவற்றுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணி வளர்த்து ஒரு சிறந்த அரச பொறிமுறைக்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்குதல்”

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சட்டத்தின் ஆதிக்கத்தினை நிலைநாட்டி, இலங்கையின் நீதித்துறை முறைமையின் மீதான கௌரவத்தையும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதையே நாம் செய்துவருகின்றோம்.

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும், மக்கள் ஆணைக்கு அமைவாகச் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, இலங்கையின் நீதித்துறை முறைமையின் மீதான கௌரவத்தையும் மக்களின் நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கே அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான, 2026 ஜூலை 24 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதனையும் தகவல்கள் அல்லது சாட்சியங்கள் மூலம் நிரூபிப்பதற்கு அவர்கள் தவறிவிட்டனர் என்றும், அவர்களின் வாதங்கள் பெரும்பாலும் வாய்ப்பேச்சு மற்றும் தனிநபர் தாக்குதல்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன என்றும் வலியுறுத்தினார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் எதிர்கொள்ள நேரிட்ட சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது, அதேபோன்று எந்தவொரு வகையிலும் அதனை நியாயப்படுத்தவும் இயலாது.

எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் மட்டுமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும், சம்பவத்திற்கு முன்னரும், சம்பவத்தின்போதும், அதற்குப் பின்னரும் அவரது நடத்தை மக்கள் நம்பிக்கையை மீறும் வகையில் அமைந்திருந்தது என்றும் எதிர்க்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டுகளைத் தகவல்கள் மற்றும் சாட்சியங்கள் மூலம் நிரூபிக்க வேண்டும்.

சபையில் எழுப்பப்படும் கூச்சலினாலோ, தனிப்பட்டத் தாக்குதல்களினாலோ, குரோதத்தனமான வாசகங்களினாலோ உண்மை உறுதிப்படுத்தப்படப்போவதில்லை.

இன்றும் இங்கு எமக்குக் கேட்க நேரிட்டிருப்பது உண்மையைத் திரிபுபடுத்துதல், தகவல்களைத் தவறாக முன்மொழிதல், அரைகுறை உண்மைகள் மற்றும் அமைச்சரவை அமைச்சரொருவர் மீது வஞ்சகத் தாக்குதலைத் தொடுத்தல் ஆகியவற்றை மாத்திரமே ஆகும். இத்தகைய விடயங்களால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் நோக்கம் உறுதிப்படுத்தப்படப்போவதில்லை.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னிருந்தே சிறைச்சாலை முறைமையில் நிலவிவந்த கட்டமைப்பு ரீதியான பலவீனங்கள் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்தன என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

2022 ஆம் ஆண்டிலிருந்து சிறைச்சாலைத் திணைக்களத்தில் வெற்றிடங்கள் இருந்துவந்த போதிலும், தற்போதைய அரசாங்கமே அவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டில் 695 சிறைச்சாலைக் காவலர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 190 பேரை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன, அத்துடன் 18 உதவிச் சிறைச்சாலை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டின் பின்னர் இவ்வெற்றிடங்களை நிரப்ப ஆரம்பிக்கப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவே ஆகும்.

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தைப் பலப்படுத்துவதற்காக வெற்றிடங்களை நிரப்புதல், அத்தியாவசிய உபகரணங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்தல், கொள்முதல் செயன்முறையை ஆரம்பித்தல் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கான நடைமுறைகளை மீளாய்வு செய்தல் உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் பிரதமர் தெரிவித்தார்.

விளக்கமறியல் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் அவசியம் குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

நஞ்சு வகைகள் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் சட்டத்தைத் திருத்துவது உள்ளிட்ட சட்டச் சீர்திருத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அச்சீர்திருத்தங்கள் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் இப்பிரச்சினைகளைப் பொருட்படுத்தவில்லை எனக் கூற இயலாது. சட்டச் சீர்திருத்தம் என்பது ஒரே இரவில் மேற்கொள்ளப்படக்கூடிய ஒன்றல்ல. அதற்குரிய நடைமுறைச் செயன்முறையொன்று இருக்கின்றது. அச்செயன்முறை ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

சிறைச்சாலைகளின் நிலைமையை மேம்படுத்துவதற்காகத் தற்போதைய நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் பிரதமர் தெளிவுபடுத்தினார். சுகாதார அமைச்சுடன் இணைந்து கைதிகளுக்கும் சிறைச்சாலை ஊழியர்களுக்குமான சுகாதாரச் சேவைகளை விரிவுபடுத்துதல், உள்நோயாளி மற்றும் நிபுணத்துவ மருத்துவச் சேவைகளை அறிமுகப்படுத்துதல், புதிய சுகாதாரப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் சிகிச்சைகளுக்கான வசதிகலை மேம்படுத்துதல் என்பன அவற்றுள் அடங்குகின்றன.

அத்துடன் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைக் குறைப்பதற்காகச் சமூக அடிப்படையிலான மறுவாழ்வுத் திட்டங்கள் மற்றும் தொழிற்பயிற்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, விடுதலையான பின்னர் வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான திறன்களைக் கைதிகளுக்கு வழங்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகப் பிரதமர் தெரிவித்தார்.

நீதித்துறையில் விரிவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய பிரதமர்,

சட்டத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டவும், இலங்கையின் நீதித்துறை முறைமையின் மீதான கௌரவத்தையும் நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்பவுமே எமக்கு மக்கள் ஆணை கிடைத்திருக்கின்றது.

பல ஆண்டுகளாக நிலவிவந்த முறைமைசார் ஊழல், நிறுவன வினைத்திறனின்மை மற்றும் கட்டமைப்பு ரீதியான பலவீனங்கள் காரணமாகச் சீர்குலைந்திருந்த நீதித்துறை முறைமையுடனேயே தற்போதைய அரசாங்கத்திற்குப் பணியாற்ற நேரிட்டுள்ளது என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார்.

இத்தகைய ஊழல் நிறைந்த முறைமையொன்றை மீண்டும் கட்டியெழுப்புவது இலகுவான காரியமல்ல. இச்சம்பவமும் கடந்த காலத்தில் சிறைச்சாலை முறைமை எவ்வாறு இயங்கியது என்ற பரந்த பின்னணியிலேயே புரிந்துகொள்ளப்பட வேண்டும். இத்தகைய ஊழல் நிறைந்த முறைமையைக் கட்டியெழுப்பும் பொறுப்பே நீதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்காக நிறுவனத்திற்குள்ளேயே விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அது இலகுவான காரியமல்ல. இருப்பினும் இந்த அரசாங்கம் அச்சவாலை ஏற்றுக்கொண்டிருக்கின்றது.

எதிர்க்கட்சியினர் இதுவரை இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கும் எந்தவொரு தகவலையோ அல்லது சாட்சியங்களையோ முன்வைக்கத் தவறிவிட்டனர். ஆகையினால், இது வெறுமனே வாய்ப்பேச்சு மூலமாக மேற்கொள்ளப்படும் ஒரு அரசியல் அவதூறு மட்டுமே என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இது நீதித்துறை முறைமை பற்றிய விடயம் அல்ல அரசாங்கமும் அமைச்சும் நடைமுறைப்படுத்தி வரும் சீர்திருத்தங்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்படும் மற்றுமொரு அரசியல் முயற்சியும், கவன ஈர்ப்பிற்கான பிரயத்தனமும் மட்டுமே ஆகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்த மாவட்டக் கழிவு முகாமைத்துவ உபகுழு பாராளுமன்றத்தில் கூடியது.

கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்த மாவட்டக் கழிவு முகாமைத்துவ உபகுழு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் ஜூலை 22 , பாராளுமன்றத்தில் கூடியது.

இதன்போது, முன்னைய கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட மேல் மாகாணத்தின் நகர்ப்புறத் திண்மக் கழிவுகளை அகற்றும் வசதிகள் மற்றும் திண்மக் கழிவுகளினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்காக எடுக்கப்பட்டுள்ள தற்போதைய நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் மக்களிடையே கம்போஸ்ட் குப்பைத் தொட்டிகளை உரிய முறையில் பயன்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர், கழிவு முகாமைத்துவம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள கொள்கைகளைச் சரிவர நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும், குப்பைக் கழிவுகளைச் சரிவர அகற்றுவதற்கான பிரஜைகளின் பொறுப்பு குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான லக்ஷ்மன் நிபுணாரச்சி, மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார, மேல் மாகாணப் பிரதம செயலாளர் பிரதீப் புஷ்பகுமார, மாவட்டச் செயலக அதிகாரிகள், கழிவு முகாமைத்துவ அதிகாரசபையின் (WMA) அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஜனாதிபதி மாளிகைகள் உள்ளிட்ட அரசாங்க பங்களாக்களை மக்கள் பயன்பாட்டிற்கு உட்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறையிலுள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஜனாதிபதி மாளிகைகள் மற்றும் அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ பங்களாங்களைப் பயன்படுத்தாமை தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய அரசியல் கொள்கையாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜூலை 22, பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அக்கட்டிடங்களைப் பயன்படுத்தாதபோதிலும் அவை பாழடைந்து போகாமல் பராமரித்து, மக்கள் பயன்பாட்டிற்கு உட்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாகப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, ஜனாதிபதி மாளிகைகள் உள்ளிட்ட அத்தகைய அனைத்து இடங்களையும் வணிக ரீதியிலான அல்லது ஏனைய பொதுப் பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

அத்துடன், சில உத்தியோகபூர்வ பங்களாக்களில் தற்போது நீதித்துறை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் நாட்டின் நீதித்துறைச் செயன்முறையை மேலும் வினைத்திறனுடையதாக்குவதற்கான வாய்ப்புக் கிட்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு, அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்கள் அல்லது பங்களாக்களில் வசித்து வருவதாகச் சமூக ஊடகங்களில் வெளியாகும் கூற்றுகளை முற்றாக நிராகரித்த பிரதமர், தற்போதைய அமைச்சரவையின் எந்தவொரு அமைச்சரும் உத்தியோகபூர்வ இல்லங்களில் வசிக்கவில்லை என்றும், சிலர் மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர் வீடமைப்புத் தொகுதியில் மாத்திரமே வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் திட்டமிட்டபடி ஒரு துளியும் பிசகாமல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த பிரதமர், சமூக ஊடகங்களில் வெளியாகும் ஆதாரமற்ற போலியான தகவல்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு தவறான கருத்துக்களைப் பாராளுமன்றத்தில் கேள்விகளாக எழுப்புவது பொருத்தமானதல்ல என்றும் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கல்வி டிஜிட்டல்மயமாக்கல் செயன்முறையின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பிரதமரின் கவனம்

கல்வி டிஜிட்டல்மயமாக்கல் செயன்முறையின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காகப் பிரதமர் அலுவலகம், கல்வி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, GovTech நிறுவனம், இலங்கை விமானப்படை, ஸ்ரீலங்கா டெலிகொம், டயலொக் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜூலை 21 , பாராளுமன்றத்தில் கலந்துரையாடலொன்றை நடத்தினார்.

தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்குத் தேவையான டிஜிட்டல் வசதிகளை வழங்குவதை இலக்காகக் கொண்டு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களினால், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்களின் தலைமையின்கீழ் நியமிக்கப்பட்ட விசேட செயலணியின் வழிகாட்டலின் கீழ், கடந்த ஆண்டில் பாடசாலைகளின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை அமைத்தல், Smart boards, இணையவசதிகள் மற்றும் கணினிகளை வழங்குதல் உள்ளிட்ட பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், இலங்கை விமானப்படையின் தொழில்நுட்ப உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட NEMIS (தேசிய கல்வி முகாமைத்துவ தகவல் அமைப்பு / National Education Management Information System) கட்டமைப்பின் HRM மொடியுலின் நான்கு மாகாணங்களுக்குரிய பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், எஞ்சிய ஐந்து மாகாணங்களின் தகவல்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் உள்வாங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் இடமாற்றங்களுக்கு இந்த NEMIS கட்டமைப்பு எதிர்வரும் காலத்தில் பயன்படுத்தப்படவுள்ளதுடன், ஏற்கனவே சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் ஆசிரியர் இடமாற்றப் பணிகள் இதன் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், தரவுகள் உள்ளிடப்பட்டுள்ள மனிதவள முகாமைத்துவ மொடியுலை இற்றைப்படுத்தல் பணிகளும் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன்போது, பாடசாலைகளுக்கு இணையவசதிகளை வழங்குவதற்கு ஃபைபர் (Fiber) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் முன்னேற்றம் குறித்தும் பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டதோடு, டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் அவ்வசதிகளை வழங்கி முடிப்பதற்கும், ஃபைபர் தொழில்நுட்பத்தின் கீழ் இணையவசதிகளை வழங்குவது நடைமுறையில் கடினமாகவுள்ள பாடசாலைகளுக்குக் கம்பியில்லா Wireless or Satellite தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக அனைத்துச் சேவை வழங்குநர்களின் போட்டித்தன்மைமிக்க முன்மொழிவுகளையும் பரிசீலித்து, எதிர்கால நடவடிக்கைகளைக் கல்வி அமைச்சின் செயலாளரினால் மேற்கொள்ளப்படும்.

LMS (Learning Management System) மற்றும் NEMIS (National Education Management Information System) கட்டமைப்புகளை முழுமையாகச் செயற்படுத்தி அனைத்துப் பாடசாலைகளையும் அவற்றுடன் இணைத்தல், ’ஈ-தக்சலாவ’ (e-Thaksalawa) கற்றல் தளத்தை இற்றைப்படுத்தல் மற்றும் கல்வி டிஜிட்டல்மயமாக்கலுக்காகக் கல்வி அமைச்சுக்கும் GovTech நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் செய்துகொள்ளுதல் உள்ளிட்ட பல எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், டிஜிட்டல் பொருளாதார விவகாரப் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, கல்விப் பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, வெகுஜன ஊடகப் பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, டிஜிட்டல் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பராமரிப்புச் சேவைகளை வழங்குவது ஒரு குடும்பத்தினால் தனியாகச் சுமக்கப்பட வேண்டிய தனிப்பட்ட பொறுப்பன்று, அது ஒட்டுமொத்த சமூகத்தினதும் பொறுப்பாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அதேபோன்று, பாராளுமன்றத்தின் பொறுப்பு முதலீடுகளுக்கான செலவீனங்களை மதிப்பிடுவதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படலாகாது.

அரச செலவீனங்கள் ஊடாக எதிர்பார்க்கப்படும் சமூக மற்றும் பொருளாதாரப் பலன்கள் உண்மையாகவே சென்றடைகின்றனவா என்பதை ஆராய்ந்து செயற்படவேண்டியது அதன் பொறுப்பாகும்.

2026 ஜூலை 21, நடைபெற்ற "பராமரிப்புப் பொருளாதாரத்திற்கான நிதி வழங்கள், அதற்கான பாராளுமன்றத்தின் பங்கு" (Financing the Care Economy: The Role of Parliament) எனும் வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

வெஸ்ட்மின்ஸ்டர் ஜனநாயகத்திற்கான மன்றமும் (Westminster Foundation for Democracy - WFD) இலங்கை பாராளுமன்றத்தின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியமும் இணைந்து இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தன. பொருளாதாரம் மற்றும் நிதித் துறை, பாலின சமத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கத்தவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஆண் பெண் சம பங்கேற்பை உள்ளடக்கிய பொருளாதார மற்றும் வரவுசெலவுத் திட்ட பகுப்பாய்வின் ஊடாகப் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரான தடைகளைக் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவதே இக்கலந்துரையாடலின் முதன்மை நோக்கமாகும். அத்துடன் பராமரிப்புப் பொருளாதாரத்திற்காக முதலீடு செய்வதன் முக்கியத்துவம் மற்றும் எதிர்வரும் அரச வரவுசெலவுத் திட்டத்தில் சமூகப் பாதுகாப்பிற்கான முதலீடுகளை உள்ளடக்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

நியாயமான விலையில் போதுமான பராமரிப்புச் சேவைகள் இல்லாத பட்சத்தில், குடும்பங்கள் தனித்தனியாகத் தீர்வுகளைத் தேட வேண்டிய நிலை ஏற்படுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டியதோடு, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இதற்காகத் தமது வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டியிருப்பது பெண்களுக்கே என்பதையும், அதனால் அவர்களின் சேவைக்காலம் குறைவடைதல், வேலைவாய்ப்புகளை நிராகரித்தல், தொழில்சார் வாழ்க்கையை அரைகுறையில் கைவிடுதல் அல்லது தொழிலாளர் படையிலிருந்து முற்றாக வெளியேறுதல் போன்ற தீர்மானங்களை எடுக்க நேரிடுகின்றது என்பதையும் வலியுறுத்தினார். இதன் விளைவாகப் பெண்களின் வருமானம், தொழில் வாய்ப்புகள் மற்றும் பொருளாதார சுயாதீனம் என்பன இல்லாமற்போவதுடன், நாட்டிற்கும் திறமைகள், அறிவு மற்றும் உற்பத்தித்திறன்மிக்க உழைப்புச் சக்தி என்பவற்றை இழக்க நேரிடுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஆகையினால், பராமரிப்புச் சேவைகளை இதற்குமேலும் தனிப்பட்ட பொறுப்பாகக் கருதாது, தேசிய பொருளாதாரம் மற்றும் அரச கொள்கை முன்னுரிமையாகக் கருத வேண்டும் என்றும் வலியுறுத்திய பிரதமர்,

பராமரிப்புப் பணிகளை ஒரு குடும்பத்திற்குள் மாத்திரம் நிறைவேற்றப்பட வேண்டிய தனிப்பட்ட பொறுப்பாகக் கருதுவதை நாம் நிறுத்த வேண்டும். பராமரிப்புச் சேவைகள் என்பது சமூகத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பாகும். அது ஒரு பொருளாதாரப் பிரச்சினை மாத்திரமன்றி, பாலின சமத்துவம் தொடர்பான ஒரு பிரச்சினையுமாகும். அதேபோன்று, இதன் மூலம் அரச கொள்கை சார்ந்த விடயங்களும் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்படுகின்றன எனக் குறிப்பிட்டார்.

பராமரிப்புப் பொருளாதாரத்திற்காக முதலீடு செய்வது சமூக நலன்புரிக்காக மேற்கொள்ளப்படும் செலவினம் மாத்திரமன்றி, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மனித மூலதனத்தைப் பலப்படுத்தும் மூலோபாய முதலீடாகும் என்பதை வலியுறுத்திய பிரதமர், நியாய விலையிலான சிறுவர் பராமரிப்புச் சேவைகள், தரமான ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி, முதியோர் பராமரிப்புச் சேவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவு மற்றும் பலமான சமூக பாதுகாப்பு முறைமை என்பவற்றின் மூலம் பெண்கள் அதிகளவில் தொழிலாளர் படையில் இணைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதுடன், அதன் மூலம் பராமரிப்புத் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி, குடும்பங்களும் சமூகங்களும் பலமடைகின்றன என்றும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும், வரவுசெலவுத் திட்டம் என்பது வெறும் நிதி சார்ந்த ஆவணம் மாத்திரமல்ல. அது ஒரு நாடு என்ற வகையில் நமது முன்னுரிமைகளைப் பிரதிபலிக்கும் ஒன்றாகும். அதன் மூலம் அரச வளங்களுக்கான முதலீடுகளை ஒதுக்குவது தொடர்பாக நாம் எடுக்கும் தீர்மானங்கள் மட்டுமன்றி, நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம், நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியத் தேவையாகக் கருதப்படுவது எது என்பதும் தெளிவுபடுத்தப்படுகின்றது எனக் குறிப்பிட்ட பிரதமர்,

போட்டித்தன்மைமிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு, பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கேற்கக்கூடிய சமூக உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படுவது அத்தியாவசியமாகும் என்பதை வலியுறுத்தினார்.

அத்தோடு, பராமரிப்புச் சேவைகளைப் பலப்படுத்துவதில் பாராளுமன்றத்தின் பொறுப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

பாராளுமன்றத்தின் பொறுப்பானது அரச செலவினங்களை அங்கீகரிப்பதோடு மாத்திரம் வரையறுக்கப்படலாகாது என்றும், பராமரிப்புச் சேவைகளுக்கான உள்கட்டமைப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் ஊதியமின்றி ஆற்றப்படும் பராமரிப்புச் சேவைகள் மீதான சுமையைக் குறைத்துப் பொதுச் சேவைகளுக்கான முதலீடுகளை ஒதுக்குதல் ஆகியன வரவுசெலவுத் திட்டத்தில் சரிவர நடைபெறுகின்றனவா என்பதை உறுதிப்படுத்துவதும் அதன் பொறுப்பாகும் என்றும், கொள்கை வகுப்பிற்கு வலுவான சான்று அடிப்படையிலான அடித்தளம் அவசியமானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவியும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான, சரோஜா சாவித்திரி போல்ராஜ், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள், இராஜதந்திரப் பிரதிநிதிகள், இலங்கையிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் ஜனநாயகத்திற்கான அறக்கட்டளையின் (WFD) பணிப்பாளர் மற்றும் பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், துறைசார் நிபுணர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

சைபர் அச்சுறுத்தல்கள், இணையவழி வன்முறைகள் மற்றும் பிள்ளைகளின் நல்வாழ்வுக்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் ஏற்படும் தாக்கங்களிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தின் கவனம்

இந்நாட்டுப் பிள்ளைகளைச் சைபர் அச்சுறுத்தல்கள், இணையவழி (Online) வன்முறைகள் மற்றும் அவர்களின் நல்வாழ்வுக்கு ஏற்படும் பாதகமான தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதற்காக ஒழுங்குபடுத்தல் மற்றும் கல்விசார் தீர்வுகளைக் கொண்ட விரிவான தேசிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் ஜூலை 21, பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

டிஜிட்டல் கல்விச் செயலணியின் (Digital Education Task Force) பல்துறைசார் செயற்குழுவொன்றின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விசேட கலந்துரையாடலில், பிள்ளைகள் டிஜிட்டல் களத்திற்குள் பிரவேசிப்பதால் பெற்றுக்கொள்ளும் நன்மைகளை உறுதிசெய்யும் அதேவேளை, இணையவழியில் ஏற்படும் தீங்குகளிலிருந்து அவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் பிள்ளைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக வயதுக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்துக் கலந்துரையாடி வரும் பின்னணியில், இத்தகைய தடைகளை அறிமுகப்படுத்துவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் உள்ள சிக்கலான செயன்முறைகள் குறித்தும், பிள்ளைகளைப் பாதுகாப்பதில் இத்தகைய நடவடிக்கைகளின் செயல்திறன் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

முதன்முதலில் இத்தகைய தடையை விதித்த நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி, 85% பிள்ளைகள் வேறு வழிகள் ஊடாகத் தொடர்ந்து அத்தளங்களைப் (Platforms) பயன்படுத்தியமை தெரியவந்திருக்கின்றது.

அத்துடன், இத்தகைய தடைகள் மூலம் கற்றல் வாய்ப்புகளை இழத்தல், ஆபத்து நிறைந்த வேறு தளங்களின் பயன்பாடு அதிகரித்தல், சமூக உறவுகள் முறிவடைதல் மற்றும் அனைத்துப் பயனாளர்களினதும் தனிப்பட்ட பரிசீலனைக்கு ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்கள் உட்பட ஏற்படக்கூடிய பாதகமான பக்கவிளைவுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பிள்ளைகள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான தீங்குகள், அதாவது இணையவழி மூலம் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்குதல், (Grooming and exploitation), பாதகமான உள்ளடக்கங்களுக்கு வழிவகுத்தல், தூக்கம் பாதிக்கப்படுதல், அடிமையாக்கும் இணையவழிச் சேர்ப்பாடுகள், உளவியல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஏற்படும் எதிர்மறையான பாதிப்புகள் போன்ற பிரச்சினைகளுக்குத் திறம்படத் தீர்வுகாண்பதற்காகப் பல்வேறு கருவிகள் மற்றும் மூலோபாயங்களைக் கொண்ட ’புத்திசாலித்தனமான சேர்க்கை’ (Smart mix) பரிந்துரைக்கப்பட்டது.

இம்மூலோபாயங்களுள் டிஜிட்டல் எழுத்தறிவை உயர்த்துதல், பெற்றோர்களையும் பிள்ளைகளையும் பலப்படுத்துதல், இணையவழித் தளங்களின் பொறுப்புக்கூறலை அதிகரித்தல், அடிமையாக்கும் அம்சங்களைச் செயலிழக்கச் செய்தல், ’வடிவமைப்பிலேயே பாதுகாப்பு’ (Safety-by-design) குறித்துக் கவனம் செலுத்துதல் மற்றும் ஏற்படும் தீங்குகளுக்குத் திறம்படப் பதிலளித்தல் ஆகிய விடயங்கள் உள்ளடங்குகின்றன.

சிறுவர்களின் இணையவழிப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நல்வாழ்வுக்காகச் சான்றுகள் சார்ந்த அணுகுமுறை மற்றும் அமைச்சுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புடனான விரிவான அணுகுமுறையைப் பின்பற்றுவதற்கு அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இச்செயன்முறைக்குச் சமாந்தரமாக, மாணவர்கள், கல்விமான்கள் மற்றும் பெற்றோர்களுக்காக இணையவழிப் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நல்வாழ்வுக்காகத் தயாரிக்கப்பட்ட பாடசாலை மட்டத்திலான வரைவு வழிகாட்டற்கோவையொன்றும் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டது.

வளர்ந்து வரும் ஆபத்துகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் மூலங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தி, சர்வதேசக் கட்டமைப்புகள், தேசிய அனுபவங்கள் மற்றும் இலங்கையில் தற்போதுள்ள மூலங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், பொருத்தமான அதிகாரிகளின் அனுமதியின் பின்னர், உரிய பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல் திட்டங்களுடன் இவ்வழிகாட்டல்கள் நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, டிஜிட்டல் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் டிஜிட்டல் கல்விச் செயலணியின் உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு