கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வுகள் வழங்கப்படும் - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், இன்று (09) பாராளுமன்றத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அப்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,
கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகம் தொடர்பாக நியமிக்கப்பட்ட குழு, தற்போது கற்பிக்கப்பட்டு வரும் பாடநெறிகளைப் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைத்துக் கற்பித்தல் அல்லது தற்போது கற்று வரும் பாடநெறிகளுக்கு இணையான பிற பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் பாடநெறிகளுடன் இணைத்தல், அதேபோன்று பல்கலைக்கழக நடவடிக்கைகளை தற்போது செயல்பட்டு வரும் விதத்திலேயே செயல்பட விடுவதோடு தேவையான வளங்கள் மற்றும் வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் தற்போதைய பாடநெறிகளை முறையாகவும் தரமாகவும் செயல்படுத்துவது என இரண்டு பிரதான தீர்வுகளைப் பரிந்துரைத்திருக்கிறது.
இந்த இரண்டு பரிந்துரைகளில் மிகவும் பொருத்தமான பரிந்துரைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்குச் சிறிது காலம் தேவைப்படும். அதற்கமைய, ஒவ்வொரு பாடநெறிக்கும் மிகவும் பொருத்தமான பரிந்துரையைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வுகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். ஆகவே, முதலாவது குழுவின் பட்டப்படிப்பு முடிவடைவதற்குள் விரைவாகத் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவற்றில் எந்தப் பரிந்துரையைச் செயல்படுத்தினாலும், தற்போதுள்ள பாடநெறிகளின் சிறப்பம்சங்களை மாற்றலாகாது என குழு தீர்மானித்துள்ளது. இருப்பினும் குறிப்பிட்டதொரு பாடநெறி இந்த நாட்டில் இந்தப் பல்கலைக்கழகத்தில் திறம்படக் கற்பிக்கப்படுமாயின், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து, மிகவும் பொருத்தமான சிறப்பம்சத்தைக் கற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சுதேச சுகாதார விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பீடம் (Faculty of Indigenous Health Sciences & Technology), BSc (Hons) in Indigenous Medicinal Resources, BHSc (Hons) in Indigenous Pharmaceutical Technology ஆகிய பட்டப்படிப்புகளின் பாடத்திட்டத்தை பொருத்தமான வகையில் மாற்றுவதற்காக சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் (Stakeholders Consultations) 2025.07.25 அன்று கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. ஏனைய கற்கைநெறிகளுக்கும் இத்தகைய கலந்துரையாடல்களை நடத்துமாறு மேற்குறிப்பிட்ட குழு பரிந்துரை செய்திருக்கின்றது.
பட்டப்படிப்புகளுக்கான வேலைவாய்ப்புகளை வழங்குவது தொடர்பாக தொழில் வாய்ப்பு வழங்குனர்களை (Employers) அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறான வேலைவாய்ப்புகள் காணப்படாத அல்லது பிரச்சனைகள் காணப்படுகின்ற கற்கைநெறிகளை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதத்தில் சீர்திருத்தல் அல்லது வேலைவாய்ப்புகளை உறுதி செய்யக்கூடிய பாடத்திட்டங்களுக்கு மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பல்கலைக்கழகத்தில் நிலவி வருகின்ற இடவசதி பற்றாக்குறைக்கு விரைவாகத் தீர்வு காண தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், நுகேகொடையில் அமைந்திருக்கும் பீடத்தைக் கம்பஹாவில் தேவையான இடவசதிகள் இருக்கின்ற இடத்திற்குக் கொண்டு செல்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
Faculty of Indigenous Health Sciences & Technology, Faculty of Indigenous Social Science & Management மற்றும் Faculty of Graduate Studies ஆகிய பீடங்களுக்கு புதிய மாணவர்களை உள்வாங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு (University Grants Commission) ஆலோசனை வழங்கப்பட்டிருக்கின்றது.
அத்தோடு பல்கலைக்கழக விரிவுரையாளர்களை சேவையில் இணைத்துக் கொள்ளும்போது ஏற்பட்டிருக்கும் மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
பிரதமர் ஊடகப்பிரிவு