பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வுகள் வழங்கப்படும் - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், இன்று (09) பாராளுமன்றத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அப்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகம் தொடர்பாக நியமிக்கப்பட்ட குழு, தற்போது கற்பிக்கப்பட்டு வரும் பாடநெறிகளைப் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைத்துக் கற்பித்தல் அல்லது தற்போது கற்று வரும் பாடநெறிகளுக்கு இணையான பிற பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் பாடநெறிகளுடன் இணைத்தல், அதேபோன்று பல்கலைக்கழக நடவடிக்கைகளை தற்போது செயல்பட்டு வரும் விதத்திலேயே செயல்பட விடுவதோடு தேவையான வளங்கள் மற்றும் வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் தற்போதைய பாடநெறிகளை முறையாகவும் தரமாகவும் செயல்படுத்துவது என இரண்டு பிரதான தீர்வுகளைப் பரிந்துரைத்திருக்கிறது.

இந்த இரண்டு பரிந்துரைகளில் மிகவும் பொருத்தமான பரிந்துரைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்குச் சிறிது காலம் தேவைப்படும். அதற்கமைய, ஒவ்வொரு பாடநெறிக்கும் மிகவும் பொருத்தமான பரிந்துரையைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வுகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். ஆகவே, முதலாவது குழுவின் பட்டப்படிப்பு முடிவடைவதற்குள் விரைவாகத் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவற்றில் எந்தப் பரிந்துரையைச் செயல்படுத்தினாலும், தற்போதுள்ள பாடநெறிகளின் சிறப்பம்சங்களை மாற்றலாகாது என குழு தீர்மானித்துள்ளது. இருப்பினும் குறிப்பிட்டதொரு பாடநெறி இந்த நாட்டில் இந்தப் பல்கலைக்கழகத்தில் திறம்படக் கற்பிக்கப்படுமாயின், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து, மிகவும் பொருத்தமான சிறப்பம்சத்தைக் கற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சுதேச சுகாதார விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பீடம் (Faculty of Indigenous Health Sciences & Technology), BSc (Hons) in Indigenous Medicinal Resources, BHSc (Hons) in Indigenous Pharmaceutical Technology ஆகிய பட்டப்படிப்புகளின் பாடத்திட்டத்தை பொருத்தமான வகையில் மாற்றுவதற்காக சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் (Stakeholders Consultations) 2025.07.25 அன்று கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. ஏனைய கற்கைநெறிகளுக்கும் இத்தகைய கலந்துரையாடல்களை நடத்துமாறு மேற்குறிப்பிட்ட குழு பரிந்துரை செய்திருக்கின்றது.

பட்டப்படிப்புகளுக்கான வேலைவாய்ப்புகளை வழங்குவது தொடர்பாக தொழில் வாய்ப்பு வழங்குனர்களை (Employers) அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறான வேலைவாய்ப்புகள் காணப்படாத அல்லது பிரச்சனைகள் காணப்படுகின்ற கற்கைநெறிகளை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதத்தில் சீர்திருத்தல் அல்லது வேலைவாய்ப்புகளை உறுதி செய்யக்கூடிய பாடத்திட்டங்களுக்கு மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பல்கலைக்கழகத்தில் நிலவி வருகின்ற இடவசதி பற்றாக்குறைக்கு விரைவாகத் தீர்வு காண தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், நுகேகொடையில் அமைந்திருக்கும் பீடத்தைக் கம்பஹாவில் தேவையான இடவசதிகள் இருக்கின்ற இடத்திற்குக் கொண்டு செல்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Faculty of Indigenous Health Sciences & Technology, Faculty of Indigenous Social Science & Management மற்றும் Faculty of Graduate Studies ஆகிய பீடங்களுக்கு புதிய மாணவர்களை உள்வாங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு (University Grants Commission) ஆலோசனை வழங்கப்பட்டிருக்கின்றது.

அத்தோடு பல்கலைக்கழக விரிவுரையாளர்களை சேவையில் இணைத்துக் கொள்ளும்போது ஏற்பட்டிருக்கும் மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப்பிரிவு

தரவுகள் மீது மாத்திரம் தங்கியிராது, உலகத்தை மாற்றியமைக்கக்கூடிய படைப்பாற்றல் மிக்க ஒரு தலைமுறையே நமக்குத் தேவைப்படுகிறது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் பாடசாலைகள் மத்தியில் 100 புத்தாக்க சங்கங்களை நிறுவும் தேசிய வேலைத்திட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன ஆகியோரின் தலைமையில் செப்டெம்பர் 8ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், இப் புத்தாக்க சங்கங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதைக் குறிக்கும் வகையில் நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய 9 பாடசாலைகளுக்கு, பிரதமரின் கையால் புத்தாக்க நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

புத்தாக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு வழங்கக்கூடிய பங்களிப்பு, பாடசாலை மட்டத்திலான புத்தாக்க வாய்ப்புகள் மற்றும் சவால்கள், புத்தாக்கச் சங்கங்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு, புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகளைப் பெறுவதன் முக்கியத்துவம், மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள், புதிய கண்டுபிடிப்புகள், மற்றும் புத்தாக்கங்கள் மூலம் ஒரு படைப்பாற்றல் மிக்க தொழிலாளர் படையை நாட்டில் உருவாக்குதல் ஆகிய முக்கிய விடயங்கள் பற்றி இந்நிகழ்வில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

புதிய உலகில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணக்கூடிய ஒரு புதிய தலைமுறையை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அப்போது, நடைமுறையில் உள்ள பாரம்பரியக் கல்வி முறைக்கு அப்பாலான புதிய கல்வி முறையின் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், புதிய கண்டுபிடிப்பாளரின் மதிப்பு என்பது அவர்களின் கல்வித் தகுதிகள், பெற்றிருக்கும் பட்டம், அல்லது தனதாக்கிக் கொண்டிருக்கும் காப்புரிமைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்றும், நிகழ்கால சமூகத்தை மேலும் சிறப்பாக மாற்றி அமைப்பதற்கு புதிய கண்டுபிடிப்பாளர் வழங்கும் பங்களிப்பே மிக முக்கியமானது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

சமூகம் பற்றிய உணர்வையும், சமூகத்தின் மீதான பொறுப்புணர்வையும் கொண்ட, இரக்கமும் மனிதாபிமானமும் மிக்க புதிய கண்டுபிடிப்பாளர்களை உருவாக்குவதற்குத் தேவையான சூழலை உருவாக்குவதும், அவர்களை ஊக்குவிப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் பிரதமர் தெரிவித்தார்.

"எனக்குத் தேவைப்படுவது தரவுகளைப் பற்றி அறிந்த ஒரு தலைமுறை மாத்திரம் அல்ல. அந்தத் தரவுகளின் உண்மைத்தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடிய, ஆழ்ந்த அறிவையும் புதிய கண்ணோட்டத்தையும் கொண்டுள்ள, திரட்டப்பட்ட தரவுகளையும் வெறும் புத்தக அறிவையும் பயன்படுத்தி உலகத்தை மாற்றியமைக்கக்கூடிய மனப்பான்மையும் படைப்பாற்றலும் மிக்க ஒரு தலைமுறையே நமக்குத் தேவைப்படுகிறது. புதுவிதத்தில் சிந்தித்து, ஒரு விடயத்தை புதிய கண்ணோட்டத்தில் பார்த்து, கிடைத்திருக்கும் தரவுகள், தகவல்கள் ஆகியவற்றை தமது அறிவை முன்னிலைப்படுத்தி செயல்படத் தெரிந்த, இந்த உலகம் பற்றிய ஆர்வத்தைக் கொண்ட திறமைசாலிகளே நமக்குத் தேவைப்படுகின்றனர்" என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவம் பற்றியும், அப்பணியில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சிற்கும், கல்வி அமைச்சிற்கும் உள்ள பொறுப்புகள் பற்றியும் சுட்டிக்காட்டினார். அத்தோடு, இந்த நாட்டிற்கு இருக்கும் விசேடமான சொத்து, நாட்டிற்காக புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி அதற்காக எதிர்காலத்தில் கனவு காணும் ஒரு புதிய தலைமுறையே எனக் கூறிய அமைச்சர், புதிய கண்டுபிடிப்புகளுக்குத் தேவையான உச்சகட்ட ஒத்துழைப்பை மாணவர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் என்ற வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல். மொஹமட் நவவி, இலங்கை புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் வெரஞ்ச கருணாரத்ன உள்ளிட்ட விருந்தினர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வரும் பாடசாலை மாணவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப்பிரிவு

உலக நீர்விளையாட்டு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம் பிரதமரைச் சந்தித்தார்.

உலக நீர்விளையாட்டு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம் கேப்டன் ஹுசைன் அல் முசல்லம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு, செப்டம்பர் 8 அன்று பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது, விளையாட்டு வீரர்களின் மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு அரசாங்கத்திற்கும் விளையாட்டுத் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை கேப்டன் ஹுசைன் அல் முசல்லம் வலியுறுத்தினார். மேலும், தற்போதுள்ள விளையாட்டுச் சட்டம் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதின் அவசியத்தையும், தேவையான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியதன் தேவையையும் எடுத்துரைத்தார்.

அப்போது, பாடசாலை மாணவர்களிடமும் சமூகத்திலும் விளையாட்டை ஊக்குவிப்பதன் மூலம் நன்னடத்தையும் ஆரோக்கியமும் வளரும் என்று பிரதமர் கூறினார்.

அத்தோடு, விளையாட்டுத் துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், விளையாட்டு வீரர்களுக்குப் பாதுகாப்பு அளித்தல், குறிப்பாகப் பெண்களின் பங்கேற்பில் கவனம் செலுத்துதல் போன்றவற்றில் அரசாங்கம் முன்னுரிமை அளித்து முதலீடு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் கல்வி அமைச்சகத்துடன் இணைந்து நீர்வழி விளையாட்டுத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில், தேசிய ஒலிம்பிக் குழுவின் (NOC) தலைவர் சுரேஷ் சுப்ரமணியமும் கலந்துகொண்டார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமரின் வாழ்த்துச் செய்தி

இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய அன்பர்கள், முஹம்மது நபிகள் (ஸல்) நாயகம் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவதை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நபிகள் நாயகம் அவர்களின் போதனைகள் வெறும் மதக் கோட்பாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டவை அல்ல; மாறாக, முழு மனிதகுலத்திற்கும் நன்மையளிக்கும் உலகளாவிய மனிதநேயக் கோட்பாடுகளாகும். குறிப்பாக, சமூக நீதி, சமத்துவம், ஒடுக்கப்பட்டவர்கள் மீதான இரக்கம் மற்றும் ஆட்சியாளர்களின் பொறுப்புக்கூறல் பற்றிய அவர்களின் போதனைகள் இன்றைய சமூகத்திற்கு முன்னெப்போதையும் விட மிகவும் பொருத்தமானவையாகும்.

அக்காலத்தில் சமூகத்தில் நிலவிய அநீதியும் ஊழலும் நிறைந்த அமைப்புகளுக்கு எதிராக எழுந்த ஒரு புரட்சிகரமான கொள்கையாகவே அவர்களின் செய்தி அமைந்திருந்தது. மேலும், அது ஒரு மனிதன் மற்றொரு மனிதனைச் சுரண்டாத, அனைவரும் கண்ணியத்துடன் வாழக்கூடிய ஒரு சமூகத்தைக் கட்டமைப்பதற்கான உன்னதமான நோக்கத்தைக் கொண்டிருந்தது.

ஒரு நாடாக நாம் புதிய சமூக மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்தத் தருணத்தில், ஊழலும் ஏற்றத்தாழ்வும் அற்ற நீதியான ஆட்சி பற்றிய அந்தப் போதனைகள் நமக்கு மிகுந்த வலிமையையும் உத்வேகத்தையும் தருகின்றன.

இலங்கையின் முன்னேற்றத்திற்கு முஸ்லிம் சமூகம் ஆற்றியுள்ள வரலாற்று முக்கியத்துவம் மிக்க பங்களிப்பை நான் மிகுந்த மதிப்புடன் நினைவுகூர்கிறேன். இந்த உன்னதமான போதனைகளை முன்மாதிரியாகக் கொண்டு, அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்கப்பெறும், மனிதநேயமும் செழிப்பும் மிக்கதோர் தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன்.

அனைவருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த மீலாதுன்-நபி தினமாக அமையட்டும்!

கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு
2025 செப்டம்பர் 05

பிரதமருக்கும் இத்தாலியின் துணைச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி இராஜாங்க செயலாளர் மரியா திரிபோடி (Maria Tripodi) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு செப்டெம்பர் 4 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.

அரசியல் கலந்துரையாடல்களுக்கான வாய்ப்பை அதிகரிப்பது, வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது மற்றும் கலாசார மற்றும் கல்விப் பரிமாற்றங்களை வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.

பலமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துதல் மற்றும் ஊழலற்ற ஒரு நிலையான தேசத்தை முன்னேற்றுவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து பிரதமர் இங்கு வலியுறுத்தினார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், இத்தாலியுடனான நீண்டகால நட்பைப் பாராட்டியும் சர்வதேச மன்றங்களில் இலங்கைக்கு ஆதரவளிப்பது குறித்தும் பிரதம மந்திரி கருத்துத் தெரிவித்தார். இலங்கையின் அண்மைய முன்னேற்றங்களை திரிபோடி (Maria Tripodi ) பாராட்டினார்.

அத்துடன், தற்போதைய வேலைத்திட்டங்களுக்கு இத்தாலியின் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் டாமியானோ பிராங்கோவிக் (Damiano Francovig) உள்ளிட்ட இத்தாலிய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர், பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஷ்வர குணரத்ன, அதே அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் இசூரிகா கருணாரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

“ஒரு பொறுப்புமிக்க அரசாங்கம் என்ற வகையில், குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் அரச நிதியைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.” - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

குழந்தைகளுக்கான நிதி ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், “அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம், குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிறுவர்களின் உரிமைகள் மற்றும் நலனை உறுதிப்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த காரணியாகும். ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக, குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் பொது நிதியைப் பயன்படுத்துவதை நாம் உறுதிசெய்ய வேண்டும்,” எனத் தெரிவித்தார்.

கொழும்பில் NH Collection Hotel-லில் செப்டம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் நடைபெறும் “Financing What Matters: Strengthening Public Financial Management for Inclusive Social Outcomes for Children and Families” என்ற தலைப்பிலான பிராந்திய அறிவுப் பரிமாற்றத் திட்டத்தின் தொடக்க விழாவில் உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் UNICEF ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சி, ஆசியாவில் அரச நிதி மேலாண்மை, வரவுசெலவுத் திட்டம் மற்றும் செலவின மேலாண்மை ஆகியவை தொடர்பான கொள்கை வகுப்பாளர்களுக்கும் சர்வதேச பங்குதாரர்களுக்கும் இடையே அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒரு தளமாகச் செயல்படுகிறது.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், “நமது அனைத்து அரச கொள்கைகளும் குழந்தைகளின் மிக உயர்ந்த தேவைகளைப் பிரதிபலிக்கின்றன. நமது அரசாங்கம் குழந்தைகளை நமது பொறுப்புகளின் மையமாக வைத்திருக்கிறது. எனவே, அதிகமாகப் பாதிக்கப்படுகின்ற பிள்ளைகள் உள்ளிட்ட கூடுதலான இடர்களுக்கு முகம் கொடுத்திருக்கும் சிறுவர்களுக்கு ஏற்படும் பொருளாதாரத் தாக்கம் குறித்த விழிப்புணர்வுடன், அரச நிதி மேலாண்மையில் முன்னுரிமை கொடுத்துச் செயல்படுகிறோம்,” எனத் தெரிவித்தார்.

இதற்கமைய, 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் குழந்தைகளை மையமாகக் கொண்ட பல நிதி உதவித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஆதரவற்ற குழந்தைகள் அல்லது பாதுகாவலரின் பராமரிப்பில் உள்ள குழந்தைகளுக்கு மாதாமாதம் ரூ. 5,000 உதவித்தொகை வழங்குதல். இதற்காக ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 2,000 குழந்தையின் வங்கிக் கணக்கிலும், மீதி ரூ. 3,000 குழந்தையின் பராமரிப்பிற்காகவும் வழங்கப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட 379 சிறுவர் இல்லங்களின் அடிப்படை வசதிகள், கட்டமைப்பு வசதிகள் மற்றும் மனிதவளத்தை மேம்படுத்துவதற்காக ரூ. 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

18 வயது பூர்த்தியான பிறகு திருமண பந்தத்தில் இணையும் ஆதரவற்ற குழந்தைகளாக இருந்தவர்களுக்கு நீண்டகாலப் பாதுகாப்பு மற்றும் நிலையான வீட்டை அமைத்துக்கொள்வதற்கு நிதி உதவி வழங்குவதற்காக ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட வேண்டிய ஆதரவற்ற குழந்தைகளுக்காக உகந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்த 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

நரம்பியல் வளர்ச்சி குறைபாடுகளால் (உதாரணமாக autism) பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு Lady Ridgeway சிறுவர் மருத்துவமனையில் ஒரு சிறப்புச் சிகிச்சை பிரிவை அமைப்பதற்கு 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சிக்காக, மாதிரி பகல்நேரப் பராமரிப்பு மையம் ஒன்றை அமைப்பதற்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, எனப் பிரதமர் தெரிவித்தார்.

இந்த வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடானது சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்காக வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் வரலாற்றில் இதுவரை ஒதுக்கப்படாத மிகப்பெரிய ஒதுக்கீடாகும். பாதிப்புகளுக்கு உள்ளாகக்கூடிய குழந்தைகளைப் பாதுகாத்தல், குடும்பங்களைப் பலப்படுத்துதல், மற்றும் இலங்கையின் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி, ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் மன அமைதி ஆகியவை கிடைப்பதை உறுதிசெய்வதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைச் சுட்டிக்காட்டிய பிரதமர், “புத்தாக்கங்களை ஏற்றுக்கொண்டு, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளைப் பெற்றுக்கொடுத்து, நிலையான தன்மையைக் குறியாகக் கொண்ட நிதிக் கொள்கைக்கமையச் செயல்படுவதன் மூலம், இன்றைய சவால்களை நாளைய வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்புக்கான வாய்ப்புகளாக மாற்றி அமைப்பதை நமது அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது,” எனவும் அவர் மேலும் கூறினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய UNICEF-இன் கிழக்காசிய மற்றும் பசிபிக் பிராந்திய துணை இயக்குனர் Myo Zin Nyunt, “தொழில்நுட்ப ஆலோசனைகள், பயிற்சி மற்றும் கொள்கை விவாதங்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், இந்த வசதி இலங்கை போன்ற நாடுகளுக்குச் சிறந்த வரவுசெலவுத் திட்ட முடிவுகளை எடுக்கவும், சேவைகளை மிகவும் திறமையாக வழங்கவும், இளைஞர்கள் உட்பட நாட்டின் குடிமக்களை முடிவெடுக்கும் செயற்பாட்டில் ஈடுபடுத்தவும் உதவும்,” என குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான தூதுவர் Carmen Moreno உரையாற்றுகையில், சமூகத் துறைகளில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, இத்தகைய முதலீடுகள் இல்லாத சமூகங்கள் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்வது கடினம் எனக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலகத்தின் தலைவர் Marc-André Franche, UNICEF-இன் இலங்கை பிரதிநிதி Emma Brigham, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, பேங்கொக் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய UNICEF பிராந்திய அலுவலகங்களின் அதிகாரிகள், மற்றும் இலங்கையின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூத்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு