டிஜிட்டல் பொருளாதார மாதத்திற்கு இணையாக, செயற்கை நுண்ணறிவு தொடர்பான aigov.lk உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
பஸ் கட்டணங்களை வங்கிக் அட்டைகள் மூலம் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
டிஜிட்டல் பொருளாதார மாதத்துடன் இணைந்ததாக செயற்கை நுண்ணறிவு பற்றிய aigov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குராப்பணம் செய்து வைக்கப்படும் என்றும் , பஸ் கட்டணங்களை வங்கிக் அட்டைகள் மூலம் செலுத்துவதற்கான முறைமை ஒன்று உருவாக்கப்படும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இன்று (10) பாராளுமன்றத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்
டிஜிட்டல் மயமாக்கலால் வலுவூட்டப்பட்ட நாடாக நமது நாட்டை மாற்றி அமைக்கும் பயணத்தை துரிதப்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமாக செப்டம்பர் மாதம் டிஜிட்டல் பொருளாதார மாதமாக பெயரிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், எதிர்கால டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அரசாங்கத்தின் ஆர்வத்தை வெளிப்படுத்துவதும் இதன் நோக்கங்களில் ஒன்றாகும். செப்டம்பர் மாதத்தில் அதற்கான நிகழ்ச்சிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சிகளின் மூலம் டிஜிட்டல் கருவிகளை அடையாளம் காண்பது மற்றும் அவற்றைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இ-அரச தளங்கள், டிஜிட்டல் முறைமையிலான நிதித் தீர்வுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட புத்தாக்கங்கள் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி பயனடைவதை துரிதப்படுத்துவதை இலக்காகக் கொண்டே இச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றன.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் அதன் கீழ் வருகின்ற கூட்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் டிஜிட்டல் திட்டங்களை துரிதப்படுத்துவதன் மூலம் அதன் நன்மைகளை குடிமக்களும் வர்த்தகர்களும் விரைவாக அடைவார்கள் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது. 2030ஆம் ஆண்டளவில் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை அமெரிக்க டொலர் 15 பில்லியனாக அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12% ஆக டிஜிட்டல் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் சவாலான இலக்கை அடைவதுடன், டிஜிட்டல் துறையில் ஏற்றுமதியை அமெரிக்க டொலர் 5 பில்லியனாகவும், டிஜிட்டல் துறைசார் தொழிலாளர்களின் எண்ணிக்கையை இரண்டு இலட்சமாகவும் அதிகரிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அபிலாஷைகளைத் தெளிவாக வெளிப்படுத்தும் வகையிலும், இலக்குகளை அடைவதற்காகவும் அரச மற்றும் தனியார் துறைகளை ஒன்றிணைத்து இந்த டிஜிட்டல் பொருளாதார மாதத்தை ஒரு தளமாக உருவாக்கப்படுகின்றது. தெற்காசிய பிராந்தியத்தில் தொழில்நுட்பப் புத்தாக்கம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவை முதன்மையாகக் கொண்ட துறைகளின் வளர்ச்சிக்கு சிறந்த மையமாக இலங்கையை நிலைநிறுத்துவதும் இதன் மற்றொரு நோக்கமாகும்.
டிஜிட்டல் பொருளாதார மாதம் என்பது வெறுமனே ஒரு அடையாள முன்னெடுப்பு மாத்திரமல்ல, விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் இலங்கையின் டிஜிட்டல் அபிலாஷைகளை உலகுக்கு வெளிப்படுத்துவதற்கான ஒரு நடைமுறைச் செயற்பாடாகும், அதன் மூலம் உருவாகும் புத்தாக்கம், செயல்திறன் மற்றும் வாய்ப்புகள் எதிர்காலத்தில் நாட்டு மக்களுக்கு நேரடி நன்மைகளை பெற்று கொடுப்பதற்கான ஒரு திட்டமுமாகும். அதற்கமைய, டிஜிட்டல் மயமாக்கல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், ஆரம்ப தொழில்முனைவுகள், தொழில்முனைவோர், புத்தாக்க சுற்றுச்சூழல் அமைப்புகளை காட்சிப்படுத்துதல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் செப்டம்பர் 17, 18, 19, 20 ஆம் திகதிகளில் நடத்தப்படவிருக்கின்றன.
அதற்கான இலங்கை நிதி தொழில்நுட்ப மாநாடு, டிஜிட்டல் நிதி பயன்பாடுகளுக்குத் தம்மைப் தயார்படுத்திக் கொள்வதற்கான புதிய தீர்வுகளை ஊக்குவித்தல் ஆகியன செப்டம்பர் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடைபெற இருக்கின்றது. செயற்கை நுண்ணறிவு தேசிய கண்காட்சி (National AI Expo) செப்டம்பர் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் நடைபெற இருக்கின்றது. இந்த நூறு நாட்களில், டிஜிட்டல் மயமாக்கல் குறித்த தேசிய அளவிலான விழிப்புணர்வுகள், டிஜிட்டல் அரச சேவைகள் மற்றும் காகிதப் பயன்பாடற்ற தீர்வுகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் கண்காட்சிகள், டிஜிட்டல் கருவிகளின் நன்மைகள் குறித்து பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஊடகப் பிரசாரம், திறன் மேம்பாடு மற்றும் கல்வி, டிஜிட்டல் திறன் மேம்பாடு, தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்பத்திற்கு தம்மை பழக்கப்படுத்திக்கொள்ளுதல் குறித்து இளைஞர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மற்றும் நிபுணர்களுக்கான பயிற்சி வகுப்புகள், செயலமர்வுகள், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகளின் எதிர்கால தொழில்களை ஊக்குவிப்பதற்கான பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிகள், இ-அரசு தீர்வுகள் குறித்த மாகாண மட்டத்திலான விழிப்புணர்வுகள், டிஜிட்டல் பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து இத்துறை சார் முன்னோடிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் கலந்துரையாடல்கள், புத்திஜீவிகளின் கலந்துரையாடல்கள் ஆகியன நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
அத்தோடு, டிஜிட்டல் மாதத்துடன் இணைந்து இலங்கை கணினி அவசர சேவை பதிலளிப்பு ஒன்றியத்தின் மூலம் தேசிய இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தல், தேசிய சான்றிதழ் அதிகார சபையின் நடவடிக்கைகளை ஆரம்பித்தல், தேசிய இணையப் பாதுகாப்பு மூலோபாயத்தை அறிமுகப்படுத்துதல், வாகன அபராதங்களை அந்த இடத்திலேயே செலுத்தக்கூடிய வகையில் அரசாங்கத்தின் டிஜிட்டல் கொடுப்பனவு தளமான govpayஐ விரிவுபடுத்துதல், பயணிகளுக்கு வங்கிக் அட்டைகள் மற்றும் QR குறியீடுகள் மூலம் பஸ் கட்டணத்தைச் செலுத்துவதற்கான தேசிய போக்குவரத்து கட்டண செலுத்தல் தளத்தை நிறுவுதல், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செயற்கை நுண்ணறிவு தளமாகிய aigov.lk-ஐ உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்துதல், டிஜிட்டல் பொருளாதார அனுபவ மையத்தை மேம்படுத்துதல், சிம் கார்டுகளைப் பதிவு செய்யும் தானியங்கி செயல்முறையை ஆரம்பித்தல், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் 5G வசதிகளை அறிமுகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தற்போது நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாக்கலுக்குத் தேவையான உட்கட்டமைப்புத் தேவைகள் குறித்து ஆய்வு மற்றும் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. நிதர்சனமாக, கல்வி அமைச்சு ஏற்கனவே மாகாண, கல்வி வலய, பாடசாலை மட்டத்தில் நிலவி வருகின்ற தேவைகளைக் கண்காணித்து வருகிறது. அதேபோன்று, டிஜிட்டல் மயமாக்கலுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட கல்வி அமைச்சும், டிஜிட்டல் அமைச்சும் இணைந்து தேவையான வசதிகளை வழங்குவதற்கான ஒரு திட்டத்தை வகுத்திருக்கின்றது. இதேபோல், ஏனைய அமைச்சுகளிலும் டிஜிட்டல் மயமாக்கலுக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு