பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

பிரதமரின் வாழ்த்துச் செய்தி

இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய அன்பர்கள், முஹம்மது நபிகள் (ஸல்) நாயகம் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவதை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நபிகள் நாயகம் அவர்களின் போதனைகள் வெறும் மதக் கோட்பாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டவை அல்ல; மாறாக, முழு மனிதகுலத்திற்கும் நன்மையளிக்கும் உலகளாவிய மனிதநேயக் கோட்பாடுகளாகும். குறிப்பாக, சமூக நீதி, சமத்துவம், ஒடுக்கப்பட்டவர்கள் மீதான இரக்கம் மற்றும் ஆட்சியாளர்களின் பொறுப்புக்கூறல் பற்றிய அவர்களின் போதனைகள் இன்றைய சமூகத்திற்கு முன்னெப்போதையும் விட மிகவும் பொருத்தமானவையாகும்.

அக்காலத்தில் சமூகத்தில் நிலவிய அநீதியும் ஊழலும் நிறைந்த அமைப்புகளுக்கு எதிராக எழுந்த ஒரு புரட்சிகரமான கொள்கையாகவே அவர்களின் செய்தி அமைந்திருந்தது. மேலும், அது ஒரு மனிதன் மற்றொரு மனிதனைச் சுரண்டாத, அனைவரும் கண்ணியத்துடன் வாழக்கூடிய ஒரு சமூகத்தைக் கட்டமைப்பதற்கான உன்னதமான நோக்கத்தைக் கொண்டிருந்தது.

ஒரு நாடாக நாம் புதிய சமூக மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்தத் தருணத்தில், ஊழலும் ஏற்றத்தாழ்வும் அற்ற நீதியான ஆட்சி பற்றிய அந்தப் போதனைகள் நமக்கு மிகுந்த வலிமையையும் உத்வேகத்தையும் தருகின்றன.

இலங்கையின் முன்னேற்றத்திற்கு முஸ்லிம் சமூகம் ஆற்றியுள்ள வரலாற்று முக்கியத்துவம் மிக்க பங்களிப்பை நான் மிகுந்த மதிப்புடன் நினைவுகூர்கிறேன். இந்த உன்னதமான போதனைகளை முன்மாதிரியாகக் கொண்டு, அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்கப்பெறும், மனிதநேயமும் செழிப்பும் மிக்கதோர் தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன்.

அனைவருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த மீலாதுன்-நபி தினமாக அமையட்டும்!

கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு
2025 செப்டம்பர் 05

பிரதமருக்கும் இத்தாலியின் துணைச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி இராஜாங்க செயலாளர் மரியா திரிபோடி (Maria Tripodi) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு செப்டெம்பர் 4 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.

அரசியல் கலந்துரையாடல்களுக்கான வாய்ப்பை அதிகரிப்பது, வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது மற்றும் கலாசார மற்றும் கல்விப் பரிமாற்றங்களை வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.

பலமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துதல் மற்றும் ஊழலற்ற ஒரு நிலையான தேசத்தை முன்னேற்றுவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து பிரதமர் இங்கு வலியுறுத்தினார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், இத்தாலியுடனான நீண்டகால நட்பைப் பாராட்டியும் சர்வதேச மன்றங்களில் இலங்கைக்கு ஆதரவளிப்பது குறித்தும் பிரதம மந்திரி கருத்துத் தெரிவித்தார். இலங்கையின் அண்மைய முன்னேற்றங்களை திரிபோடி (Maria Tripodi ) பாராட்டினார்.

அத்துடன், தற்போதைய வேலைத்திட்டங்களுக்கு இத்தாலியின் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் டாமியானோ பிராங்கோவிக் (Damiano Francovig) உள்ளிட்ட இத்தாலிய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர், பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஷ்வர குணரத்ன, அதே அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் இசூரிகா கருணாரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

“ஒரு பொறுப்புமிக்க அரசாங்கம் என்ற வகையில், குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் அரச நிதியைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.” - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

குழந்தைகளுக்கான நிதி ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், “அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம், குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிறுவர்களின் உரிமைகள் மற்றும் நலனை உறுதிப்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த காரணியாகும். ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக, குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் பொது நிதியைப் பயன்படுத்துவதை நாம் உறுதிசெய்ய வேண்டும்,” எனத் தெரிவித்தார்.

கொழும்பில் NH Collection Hotel-லில் செப்டம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் நடைபெறும் “Financing What Matters: Strengthening Public Financial Management for Inclusive Social Outcomes for Children and Families” என்ற தலைப்பிலான பிராந்திய அறிவுப் பரிமாற்றத் திட்டத்தின் தொடக்க விழாவில் உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் UNICEF ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சி, ஆசியாவில் அரச நிதி மேலாண்மை, வரவுசெலவுத் திட்டம் மற்றும் செலவின மேலாண்மை ஆகியவை தொடர்பான கொள்கை வகுப்பாளர்களுக்கும் சர்வதேச பங்குதாரர்களுக்கும் இடையே அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒரு தளமாகச் செயல்படுகிறது.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், “நமது அனைத்து அரச கொள்கைகளும் குழந்தைகளின் மிக உயர்ந்த தேவைகளைப் பிரதிபலிக்கின்றன. நமது அரசாங்கம் குழந்தைகளை நமது பொறுப்புகளின் மையமாக வைத்திருக்கிறது. எனவே, அதிகமாகப் பாதிக்கப்படுகின்ற பிள்ளைகள் உள்ளிட்ட கூடுதலான இடர்களுக்கு முகம் கொடுத்திருக்கும் சிறுவர்களுக்கு ஏற்படும் பொருளாதாரத் தாக்கம் குறித்த விழிப்புணர்வுடன், அரச நிதி மேலாண்மையில் முன்னுரிமை கொடுத்துச் செயல்படுகிறோம்,” எனத் தெரிவித்தார்.

இதற்கமைய, 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் குழந்தைகளை மையமாகக் கொண்ட பல நிதி உதவித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஆதரவற்ற குழந்தைகள் அல்லது பாதுகாவலரின் பராமரிப்பில் உள்ள குழந்தைகளுக்கு மாதாமாதம் ரூ. 5,000 உதவித்தொகை வழங்குதல். இதற்காக ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 2,000 குழந்தையின் வங்கிக் கணக்கிலும், மீதி ரூ. 3,000 குழந்தையின் பராமரிப்பிற்காகவும் வழங்கப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட 379 சிறுவர் இல்லங்களின் அடிப்படை வசதிகள், கட்டமைப்பு வசதிகள் மற்றும் மனிதவளத்தை மேம்படுத்துவதற்காக ரூ. 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

18 வயது பூர்த்தியான பிறகு திருமண பந்தத்தில் இணையும் ஆதரவற்ற குழந்தைகளாக இருந்தவர்களுக்கு நீண்டகாலப் பாதுகாப்பு மற்றும் நிலையான வீட்டை அமைத்துக்கொள்வதற்கு நிதி உதவி வழங்குவதற்காக ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட வேண்டிய ஆதரவற்ற குழந்தைகளுக்காக உகந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்த 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

நரம்பியல் வளர்ச்சி குறைபாடுகளால் (உதாரணமாக autism) பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு Lady Ridgeway சிறுவர் மருத்துவமனையில் ஒரு சிறப்புச் சிகிச்சை பிரிவை அமைப்பதற்கு 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சிக்காக, மாதிரி பகல்நேரப் பராமரிப்பு மையம் ஒன்றை அமைப்பதற்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, எனப் பிரதமர் தெரிவித்தார்.

இந்த வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடானது சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்காக வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் வரலாற்றில் இதுவரை ஒதுக்கப்படாத மிகப்பெரிய ஒதுக்கீடாகும். பாதிப்புகளுக்கு உள்ளாகக்கூடிய குழந்தைகளைப் பாதுகாத்தல், குடும்பங்களைப் பலப்படுத்துதல், மற்றும் இலங்கையின் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி, ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் மன அமைதி ஆகியவை கிடைப்பதை உறுதிசெய்வதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைச் சுட்டிக்காட்டிய பிரதமர், “புத்தாக்கங்களை ஏற்றுக்கொண்டு, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளைப் பெற்றுக்கொடுத்து, நிலையான தன்மையைக் குறியாகக் கொண்ட நிதிக் கொள்கைக்கமையச் செயல்படுவதன் மூலம், இன்றைய சவால்களை நாளைய வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்புக்கான வாய்ப்புகளாக மாற்றி அமைப்பதை நமது அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது,” எனவும் அவர் மேலும் கூறினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய UNICEF-இன் கிழக்காசிய மற்றும் பசிபிக் பிராந்திய துணை இயக்குனர் Myo Zin Nyunt, “தொழில்நுட்ப ஆலோசனைகள், பயிற்சி மற்றும் கொள்கை விவாதங்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், இந்த வசதி இலங்கை போன்ற நாடுகளுக்குச் சிறந்த வரவுசெலவுத் திட்ட முடிவுகளை எடுக்கவும், சேவைகளை மிகவும் திறமையாக வழங்கவும், இளைஞர்கள் உட்பட நாட்டின் குடிமக்களை முடிவெடுக்கும் செயற்பாட்டில் ஈடுபடுத்தவும் உதவும்,” என குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான தூதுவர் Carmen Moreno உரையாற்றுகையில், சமூகத் துறைகளில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, இத்தகைய முதலீடுகள் இல்லாத சமூகங்கள் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்வது கடினம் எனக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலகத்தின் தலைவர் Marc-André Franche, UNICEF-இன் இலங்கை பிரதிநிதி Emma Brigham, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, பேங்கொக் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய UNICEF பிராந்திய அலுவலகங்களின் அதிகாரிகள், மற்றும் இலங்கையின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூத்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

டிஜிட்டல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத் துறையின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி. ஹரிணி அமரசூரிய

2025 செப்டம்பர் 2 ஆம் திகதி கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் (Galle Face Hotel) நடைபெற்ற, ருஹுண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் ஏற்பாடு செய்த “சர்வதேச விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் கருத்தரங்கு 2025” (ISAE) கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"காலநிலை நடவடிக்கை மற்றும் நிலைத்தன்மைக்கான விவசாய தொழில்நுட்பங்களில் புதுமைகளைப் புகுத்துதல்" என்பதே ISAE 2025 இன் தலைப்பாகும். இக்கருத்தரங்கின் மூலமாக உலகளாவிய விவசாயத்துறை, நிலையான தன்மை மற்றும் வளர்ந்து வரும் பயன்படுத்தி கிடைக்கப்பெறுகின்ற வாய்ப்புகள் சந்திக்க நேர்கொண்ட சவால்கள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்ப்பதற்கு இலங்கையின் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் அவர்கள்,

"இந்த மாநாட்டோடு இணைந்ததாக நடைபெறும் இளம் பட்டதாரிகளின் மன்றமானது மிகவும் பாராட்டத்தக்கதாகும். நமது எதிர்காலம் புத்தாக்கமான, அறிவு மற்றும் சமூக உணர்வு கொண்ட இளம் தலைமுறையினரைச் சார்ந்துள்ளது. .அவர்களின் கல்வி, திறமை மற்றும் தலைமைத்துவ வளர்ச்சியில் முதலீடு செய்தல் என்பது இலங்கையிலும் அதற்கு அப்பாலும் ஏற்படும் காலநிலை மாற்றங்களுக்கு தாக்குப் பிடிக்கக்கூடிய எதிர்காலத்திற்கான முதலீடாகும்.

விவசாயம் என்பது உணவு உற்பத்தி மட்டுமல்ல. அது நமது சமூகங்கள், நமது பொருளாதாரம் மற்றும் நமது உலகம் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்வதாகும்.

ஆகையினால் புத்தாக்கத்துக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, பாதிப்புக்கு உள்ளாக கூடிய மக்களுக்கு உதவி புரிதல் மற்றும் நிலையான தன்மையுடன்

முன்னோக்கிச் செல்லும் அதே வேலை, கொள்கைகளை வகுத்து காலநிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய சவால்களை வாய்ப்புகளாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எல்.எம்.அபேவிக்ரம, சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே, அக்ஸ்டார் பிஎல்சி துணைத் தலைவர் திரு.இந்திக்க குணவர்தன, ருஹுண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பி.ஏ.ஜயந்த, விவசாய பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் ஜி.வை.ஜயசிங்கே, கலாநிதி. அவந்தி மஹானாம, கலாநிதி அனுஷ்க பண்டார மற்றும் ருஹுண பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இலங்கையில் தனது உத்தியோகபூர்வ சேவைக்காலம் நிறைவுபெற்று நாட்டை விட்டுச் செல்லும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) வதிவிடப் பிரதிநிதி குன்லே அடியேனி (Kunle Adeniyi) அவர்களுக்கும்,பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு.

இந்த சந்திப்பின்போது, தனது பதவிக்காலத்தில் ஐ.நா. மக்கள்தொகை நிதியத்திற்கு இலங்கை வழங்கிய வலுவான ஒத்துழைப்பிற்கு திரு. அடெனியி தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். குறிப்பாக, மகளிர் ஆணைக்குழுவை நிறுவுவதில் பிரதமர் அளித்த தலைமைத்துவ ஒத்துழைப்பிற்கு அவர் விசேட நன்றியைத் தெரிவித்தார்.

மேலும், ஐ.நா. நிதியத்தின் பணிகளை முன்னெடுப்பதில் தமக்கு பணிபுரிய கிடைத்த சிறந்த பங்காளர்களில் இலங்கையர்களும் அடங்குவதாகக் கூறி, அவர்களது தொழில்சார் திறனையும் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.

ஐ.நா. மக்கள்தொகை நிதியம் நீண்ட காலமாக இலங்கையுடன் பேணிவரும் ஈடுபாட்டிற்குப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அத்துடன், திரு. அடெனியியின் தலைமையின் கீழ் வழங்கப்பட்ட பெருமதி மிக்க பங்களிப்பைப் பாராட்டினார்.

இரு தரப்பினதும் சிரேஷ்ட அதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். ஐ.நா. மக்கள்தொகை நிதியத்தின் உதவிப் பிரதிநிதி கலாநிதி தயானத் ரணதுங்க மற்றும் அலுவலகத் தலைவர் திரு. புன்ட்ஷோ வாங்யெல் ஆகியோரும். இலங்கை பிரதிநிதிகளாக பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சப்புத்தந்திரி, பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாகரிகா போகாவத்த மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி தயானி மெண்டிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு சிறு பிரிவின் விருப்பமாகவன்றி முழு நாட்டினதும் கலாசாரமாக மாற வேண்டும். -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஊழல் எதிர்ப்புச் சட்டம் மற்றும் அறநேர்மை என்ற கருப்பொருளின் கீழ் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுடன் இணைந்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் நடைமுறைப்படுத்தபடும் இலஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்கள் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில் நடத்தப்படவுள்ள நிகழ்ச்சித் தொடரின் அங்குரார்ப்பண செயலமர்வு ஆகஸ்ட் 28 ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள மேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நாடளாவிய ரீதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த செயலமர்வில் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர்,

“நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் இடையிலான முதன்மையான தொடர்புப் புள்ளியை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும், நாங்கள் வழங்கும் ஒவ்வொரு சேவையும், உங்கள் மூலமே மக்களை சென்றடைகிறது.

இதன்போது பல்வேறு துறைகளில் அபிவிருத்தியை உருவாக்குவதுடன், குடிமக்களின் நம்பிக்கையையும் வளர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் அங்கு ஊழல் மற்றும் மோசடி உட்பட பல ஆபத்துகள் எழக்கூடும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, நாம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும்.

ஊழல் என்பது ஒரு உலகளாவிய சவாலாகும். உலகப் பொருளாதார மன்ற அறிக்கையின்படி, ஊழல் காரணமாக உலகப் பொருளாதாரம் ஆண்டுதோறும் சுமார் 3.5 டிரில்லியன் டொலர்களை இழக்கிறது. ஆனால் தீவிர மற்றும் முழுமையான வறுமையை முடிவுக்குக் கொண்டுவர தேவைப்படுவது 70-325 பில்லியன் டொலர்கள் வரை மட்டுமே ஆகும். இது ஊழல் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை தெளிவாகக் காட்டுகிறது. இந்த வழியில், ஒரு பொருளாதாரம் சுகாதாரம், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு போன்ற அத்தியாவசிய சேவைகளுக்குக் கிடைக்கும் பணத்தை இழக்கிறது. பொதுப் பணம் வீணடிக்கப்படுவது மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் சமூக சேதத்தையும், பொதுமக்களின் நம்பிக்கையையும் நீர்த்துப் போகச் செய்கிறது.

நாம் ஊழலைப் பற்றிப் பேசும்போது, அதை பாரிய அளவிலான ஊழல், சிறிய அளவிலான ஊழல் என்று வகைப்படுத்துகிறோம். அதனால் என்ன பயன்? அது ஒரு கலாசாரமாகிவிட்டது. அதை மாற்றுவதுதான் முக்கியம். ஊழலின் தாக்கத்தை சமூகத்தில் நிறுத்துவதுதான் முக்கியம். ஊழல் நிறைந்த ஒரு கலாசாரத்தில், விடயங்களைச் செய்ய தொடர்புகள் அல்லது பணம் தேவை. ஆனால் பெரும்பான்மையானவர்கள் அத்தகைய தொடர்புகள் இல்லாதவர்கள். இந்த நாட்டில் இதுபோன்றவர்களால் எப்படி விடயங்களைச் செய்துகொள்ள முடியும்?

இந்த யதார்த்தத்தை, இந்த ஊழல் நிறைந்த கலாசாரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை மாற்ற வேண்டியவர்கள் நீங்கள்தான். இங்குள்ள உங்களில் பெரும்பாலோர் இந்த ஊழல் நிறைந்த கலாசாரத்தை மாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குழு. இப்போது அதை ஒரு யதார்த்தமாக்க நமக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. நாம் எமது குடிமக்களுக்குப் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். நாம் நியாயமாக நடந்து கொள்கிறோம் என்பதை அவர்கள் உணர வேண்டும். அரச வளங்கள் திறம்படவும் வெளிப்படையாகவும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்பதை வார்த்தைகள் மூலமாக மட்டுமன்றி, செயல்கள் மூலமாகவும் நிரூபிப்பது மிக முக்கியம்.

ஆனால் மாற்றம் என்பது அதிகாரிகளுடன் சண்டையிடுவதைக் குறிக்காது. அதிகாரிகளை மாற்றுவதைக் குறிக்காது. இந்த முறைமையை நாம் மாற்ற வேண்டும். இந்த மாற்றம் தொழில்நுட்ப மாற்றம் அல்ல. இது ஒரு கலாசார மாற்றம். ஒரு ஆன்மீக நிலை. இதை உருவாக்கவே நீங்கள் அனைவரும் இந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளீர்கள். அந்தச் சூழலை உருவாக்குவது, ஒரு முன்மாதிரியாக திகழ்வது மற்றும் வழிநடத்துவது உங்களுடைய பொறுப்பு என்பதை நான் அறிவேன். நீங்கள்தான் அதற்காகக் குரல் கொடுத்தவர்கள்.

ஆனால் இந்த ஊழல் எதிர்ப்பு கலாசாரத்தை எங்கள் குழுவிற்குள் மாத்திரம் வைத்துக்கொண்டு, ஒரு குழுவாக பிரிந்து நிற்பது போதாது. முழு நாட்டிற்கும் ஒரு கலாசாரமாக இதை மாற்றுவதே எங்கள் சவால். இதற்கு அரசு இயந்திரம் மற்றும் பொது சமூகம் இரண்டையும் கையாளும் ஒரு விரிவான அணுகுமுறை தேவைப்படுகிறது. சட்டத்தை வலுப்படுத்துதல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொது செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றைத் தாண்டிய அணுகுமுறை இதற்குத் தேவைப்படுகிறது.

"அதற்கு, நாம் நமது மனசாட்சியை விழிப்படையச் செய்ய வேண்டும். இது ஒரு போர் அல்ல. ஆனால் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்திற்கான உங்கள் பொறுப்பை வலிமையுடனும் தைரியத்துடனும் நிறைவேற்ற, தேவையான தலைமையை வழங்குங்கள்" என்று பிரதமர் மேலும் கூறினார்.

இந்நிகழ்வில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எஸ்.ஏ. திசாநாயக்க, புதிய உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பல அரச அதிகாரிகள் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு