பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

கலாசார பன்முகத்தன்மையை மதிக்கும் மனிதநேயமிக்க எதிர்கால தலைமுறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மே மாதம் 16 ஆம் திகதி மாத்தறை ஊராபொல சிறி ரதனஜோதி பிரிவெனாவின் வஜ்ர ஜயந்தி (பவள விழா) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். நாட்டின் கலாசார பன்முகத்தன்மையை மதிக்கும், சூழல் நேய மனப்பான்மையை வளர்க்கும், கல்வி அறிவைப் பெற்ற, மனிதநேயமுள்ள ஒரு எதிர்கால தலைமுறையை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

புதிய மறுமலர்ச்சி யுகத்திற்கான அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு அரசியல், பொருளாதாரம், சமயம், கல்வி மற்றும் கலாசாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் நீட்சிகொண்டுள்ளது என்றும், பிரிவேனா கல்வி முறையில் தற்போது நிலவும் நெருக்கடிகளை துல்லியமாகக் கண்டறிந்து, அவற்றில் முறையாகத் தலையிட அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

ராஜகீய பண்டித கம்புருபிட்டியே வனரத்ன மகா நாயக்க தேரர் நினைவு அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவும் பிரதமரின் தலைமையில் நடைபெற்றதுடன், ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட "ருவந்தோ" மலர் சங்கைக்குரிய ஸ்ரீ ரோஹண சங்க சபையின் பிரதிச் செயலாளர் கோனதெனியே தபஸ்ஸி தேரரினால் பிரதமருக்கு வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஷியாமோபாலி வங்சிக மகாநிகாயவின் ஸ்ரீ ரோஹண பிரிவின் மகாநாயக்கர் சங்கைக்குரிய அகலக்கட பியசிறி மகாநாயக்க தேரர், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பௌத்த மற்றும் பாலி கற்கைத் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அக்க மகா பண்டித சங்கைக்குரிய கோட்டபிட்டியே ராகுல தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், தென் மாகாண ஆளுநர் எம்.கே. பந்துல ஹரிச்சந்திர மற்றும் பல விசேட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஒரு நாட்டின் அபிவிருத்தி, அந்நாட்டு மக்கள் நாட்டிற்கு அளிக்கும் உற்பத்திப் பங்களிப்புகளிலேயே தங்கியுள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஒரு நாட்டின் அபிவிருத்தி, அந்நாட்டு மக்கள் நாட்டிற்கு வழங்கும் உற்பத்தித் திறன் மிக்க பங்களிப்புகளிலேயே தங்கியுள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மே மாதம் 15 ஆம் திகதி அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற "தேசிய உற்பத்தித்திறன் விருது விழா 2025/2026" அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

இதன்போது கல்வித் துறைக்கான போட்டி பிரதமர் கலாநிதி அமரசூரியர் அவர்களினாலும், அரச துறைக்கான போட்டி கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களினாலும், உற்பத்தி மற்றும் சேவைகளுக்கான போட்டி ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் பொதுச் செயலாளர் கலாநிதி இந்திர பிரதான சிங்கவிதானவினாலும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் தெரிவித்ததாவது,

"கடந்த சில வருடங்களாக எமது நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார மந்தநிலை காரணமாக, இந்த விருது விழாவை நடத்த முடியவில்லை. ஒரு நாடாக நாம் அதற்காக வருத்தப்பட வேண்டும். இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காததால் இந்த நாடு இந்த நிலையை அடைந்துள்ளது." அது பற்றி நாங்கள் விளங்கியிருக்கிறோம். எமது நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்துடன், தேசத்தைக் கட்டியெழுப்பும் நமது பயணத்தில் ஒரு முக்கியமான கட்டத்தை நாம் அடைந்துள்ளோம். ஒரு நாட்டின் முன்னேற்றம் அதன் மக்கள் அளிக்கும் உற்பத்திப் பங்களிப்புகளிலேயே தங்கியுள்ளது. "புத்தாக்கங்களைச் செய்யாத தேசம் உலகில் முன்னேற்றமடையாது" என்று நம் முன்னோர்களின் ஒரு முதுமொழி உள்ளது. நாம் புதிய விடயங்களைச் சிந்தித்து, புதிய விடயங்களை உருவாக்காவிட்டால், நாம் முன்னேற மாட்டோம் என்பது இதன் பொருள். எனவே, நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிய படைப்புகளை உருவாக்குவதன் மூலம் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விருது வழங்கும் விழாவை மீண்டும் ஆரம்பிப்பது, எமது நாட்டு மக்களுக்கு ஒரு வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் வழங்குவதன் ஒரு பகுதியாகும். "Clean Srii Lanka" என்பதும் இந்த விடயங்களைப் பற்றியது தான். இவை ஒவ்வொன்றும் தனித்தனியான திட்டங்கள் அல்ல. இணைக்கப்பட்ட தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான எமது அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை ஆதரிக்கும் திட்டங்கள்.

உற்பத்தித்திறன் என்பது கடினமாக உழைப்பது மட்டுமல்ல, அதிக உற்பத்தித்திறனை அடைய வளங்களை சிக்கனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவதும் ஆகும்.

நம்மைச் சுற்றியுள்ள சூழலை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருப்பதன் மூலம், குறிப்பாக அரச நிறுவனங்களில், பணிகளை மிகவும் திறமையாகவும் எளிதாகவும் நிறைவேற்ற முடியும். உற்பத்தித்திறனை அதிகரிப்பது எமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. உற்பத்தித்திறன் குறைவது ஒரு நாட்டை எதிர்மறையாக பாதிக்கிறது.

எங்கள் நாடு பொருளாதார ரீதியாக சீரழிக்கப்பட்டமையால், நாங்கள் வங்குரோத்துநிலையை அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. "எனவே, முதலீட்டை மூலோபாய ரீதியாக அதிகரிக்கவும், நிலைபேறான அபிவிருத்தியை உறுதி செய்யவும், போட்டித்தன்மையை அதிகரிக்கவும் உற்பத்தித்திறனை அதிகரிப்பது அவசியமானதாகும்" என்று பிரதமர் கூறினார்.

இந்த நிகழ்வில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எம்.எம். எச். அபேரத்ன, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் குமாநாயக்க, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜெயசுந்தர ஆகியோர் பங்குபற்றினர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பாலஸ்தீனத்திற்கான 77வது அல்-நக்பா நினைவு தின நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

பாலஸ்தீனத்திற்கான 77வது அல்-நக்பா நினைவு தின நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார்.

’நக்பாவை முடிவுக்குக் கொண்டு வருதலும் பாலஸ்தீன மக்களின் பிரிக்க முடியாத உரிமைகளை அடைவதற்கான சர்வதேச நடவடிக்கையும்’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த நினைவு நிகழ்வு, நேற்று (15) கொழும்பு 07 இல் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு இலங்கையில் உள்ள பாலஸ்தீன தூதரகம் மற்றும் பாலஸ்தீன பேரழிவை நினைவுகூரும் இலங்கை ஒருமைபாட்டுக் குழு இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் சமயத் தலைவர்கள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் பலஸ்தீன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

தொழிற்சூழலை பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றுவது மிகவும் முக்கியம் - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும் - சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மே மாதம் 15 ஆந் திகதி கண்டி கரலிய மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை தாதியர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச தாதியர் தினம் - 2025 நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.

தாதியர் தொழிலை அறிமுகப்படுத்திய புளோரன்ஸ் நைட்டிங்கேலின் 205வது பிறந்தநாளை முன்னிட்டும், உலகம் முழுவதும் தாதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாட ஒரு மன்றத்தை உருவாக்கும் நோக்குடனும், ‘எமது தாதியர் எமது எதிர்காலம் - தாதியர்களைப் பாதுகாப்பது பொருளாதாரத்தை பலப்படுத்துகிறது" என்ற கருப்பொருளின் கீழ் இவ்வருட சர்வதேச தாதியர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

தாதியர் தொழில் தொடர்பாக எழுதப்பட்ட “ஹெதகம" சஞ்சிகையை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு வழங்கி வைக்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

தாதியர்களாக நீங்கள் சுமந்திருக்கும் பொறுப்பு மற்றும் உங்கள் சேவையைப் பற்றி சிந்திக்க இன்று நம் அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

அண்மையில் கரண்டிஎல்ல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களை பார்வையிட போக்குவரத்து அமைச்சரும் நானும் கம்பளை மருத்துவமனை மற்றும் பேராதனை மருத்துவமனைக்குச் சென்றோம். நான் ஒரு மருத்துவமனைக்குச் செல்வது இது தான் முதல் முறை இல்லை என்றாலும், ஒவ்வொரு முறை அங்கு செல்லும் போதும், எங்கள் தாதியர்கள் வழங்கும் அர்ப்பணிப்பு மற்றும் சேவையைப் பார்த்து நான் வியப்படைகிறேன். எனது தாயார் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, தாதியர்களின் அர்ப்பணிப்பை நான் நேரில் கண்டேன்.

கம்பளை மற்றும் பேராதனை மருத்துவமனைகளில் உள்ள அந்த தாதியர் சகோதர சகோதரிகளிடம் நான் உரையாடினேன். தாதியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் எனக்கு மிகவும் தெளிவாகத் தெரிந்தன. ஒரு தாதி, தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் இரவுப் பணிகளில் ஈடுபட்டதாகக் கூறினார். அப்போது அவரது குடும்பம் எங்கே என்று நான் கேட்டேன், அந்த சகோதரி சிரித்தார், " குடும்பத்தைப் பற்றி சிந்திக்கக்கூட நேரமில்லை." பிள்ளைகளை அவரது தாயார் கவனித்துக்கொள்கிறார்கள், அவர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவை செய்கிறார்கள், அவர்கள் தங்கள் கணவரை கடைசியாக எப்போது பார்த்தார்கள் என்பது அவர்களுக்கு நினைவில் இல்லை.

உண்மையில் இவ்வாறு வேலை செய்வது எவ்வாறான நிலை? எல்லாம் சரியாக இருக்கும் சூழ்நிலையில் அல்ல நாங்கள் வேலை செய்வது. வீழ்ந்து, சரிந்துபோயுள்ள ஒரு முறைமையை மீண்டும் கட்டியெழுப்பும் சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.

தாதியர் தொழிலில் 95 சதவீதம் பேர் பெண்கள். இது பெண்களுக்கு மட்டுமே பொருத்தமான ஒன்று என்றோ அல்லது பெண்கள் மட்டுமே செய்யும் ஒனறு என்றோ நான் நினைக்கவில்லை. நூற்றுக்கு 95 சதவிகிதத்தினர் எப்படிப் பெண்களாக மாறினர் என்பதைப் பற்றி நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

பெண்களாகிய எமக்கு இயற்கையான திறமை ஏதாவது இருக்கிறதா என்றும் நான் சிந்தித்தேன்.

எந்தவொரு வேலையிலும் தொழில் பாதுகாப்பு பற்றிப் பேசும்போது, அது வெறும் சம்பளத்தைப் பற்றியது மட்டுமல்ல. பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான சூழல் மற்றும் தொழிற் சூழலில் பாதுகாப்பு குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் தொழிற்சூழல் பாதுகாப்பற்றதாக மாறும் நேரங்கள் உள்ளன. பெண்கள் பெரும்பாலும் இரவு நேர வேலைகளில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், தொலைதூர இடங்களில், போக்குவரத்து குறைவாக உள்ள இடங்களிலும், தங்களை விட சக்திவாய்ந்தவர்களால் அழுத்தங்களுக்கு உள்ளாகும் இடங்களிலும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.

மேலும், ஒரு பெண்ணாக, நீங்கள் உங்கள் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையை சமநிலைப்படுத்த வேண்டும். அதற்கு, தேவையான சமூக சூழலும் வசதிகளும் தேவை. பெண்களாக நாம் எடுக்கும் பொறுப்புகளை நிறைவேற்ற நாம் என்ன வசதிகள் மற்றும் ஆதரவை வழங்குகிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். வாழ்க்கை என்பது பணம் மட்டுமல்ல, அது எல்லாவற்றையும் உள்ளடக்கியது, மகிழ்ச்சி மற்றும் ஆறுதல். அத்தகைய வாழ்க்கையை அடையக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். கடினமான தெரிவுகளை எடுக்காமல், எளிதான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு சமூகத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

இந்த தாதியர் தின கருப்பொருள் உரை பொருளாதாரத்தை வலுப்படுத்தும் தாதியர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. ஆனால் நடக்க வேண்டியது என்னவென்றால், தாதியர்களை வலுப்படுத்தும் ஒரு பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும். மக்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான கருவிகளாக மாறினால், நாம் எப்படி எளிதான வாழ்க்கையை வாழ முடியும்? பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும், அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் மற்றும் வசதிகள் உள்ள ஒரு சமூகத்தை உருவாக்குவதும் அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம் நிலை வைத்தியசாலை நிலைகளைத் தாண்டி, ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் பிரிவுகளை உருவாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

உலகில் வேகமாக வளர்ந்து வரும் முதியோர் சனத்தொகையைக் கொண்ட நாடாக இலங்கை உள்ளது, இது எதிர்காலத்தில் 25% ஐ எட்டும். அந்த மக்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்குப் பதிலாக, அவர்களை அங்கேயே பராமரித்து அவர்களின் உடல்நிலையைக் கண்காணிக்க தேவையான வசதிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

எங்கள் அடுத்த இலக்கு தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதாகும். எங்கள் மருத்துவமனைகளின் படுக்கை வசதி மிகப் பெரியது. உங்கள் சேவைகளை மட்டுமே பெற்று ஆரோக்கியமான பிரஜைகளை உருவாக்குவது கடினம், எனவே இந்த ஆண்டு 3,147 தாதியர் நியமனங்களை வழங்க நாங்கள் நடவடிக்கைஎடுத்து வருகிறோம். இணை சுகாதார பட்டதாரிகளையும் மீதமுள்ள 305 தாதியர் அதிகாரிகளையும் ஆட்சேரப்புச் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் அரசாங்க சேவை ஆணைக்குழு மற்றும் பிரதமர் அலுவலகத்தின் வெற்றிடங்கள் சம்பந்தமான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் செய்யப்படுகின்றன.

தற்போதுள்ள தாதியர்களின் எண்ணிக்கையை 40,000 லிருந்து 60,000 ஆக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூன்று மாதங்களுக்குள் தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தாதியர் பட்டம் வழங்குவது தொடர்பாக பிரதமரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் போது நாங்கள் சில முடிவுகளை எடுத்தோம். சுகாதார அமைச்சு மற்றும் உயர்கல்வி அமைச்சுடன் இணைந்து, தாதியர் பட்டங்களை முறையான முறையில் வழங்க நாங்கள் தற்போது திட்டமிட்டுள்ளோம்.

சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார பீடத்தின் பேராசிரியர் தமயந்தி தசநாயக்க, அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹந்தவ ஆரச்சி, சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் தாதியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமர் வெசாக் கொண்டாட்ட நிகழ்வுகளில் பங்கேற்பு.

மே மாதம் 14 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற பல்வேறு வெசாக் கொண்டாட்ட நிகழ்வுகளில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார்.

கல்வி அமைச்சின் ஆலோசனை மற்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் உள்ள உள்நாட்டலுவல்கள் பிரிவின் அனுசரணையுடன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிட்டி எஃப்எம் சேவையால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் பக்தி பாடல்கள் புதசர நிகழ்ச்சி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் மே 14 ஆந் திகதி கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. கொழும்பில் உள்ள 12 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பக்திப் பாடல்களை பாடினர்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி உதித கயாஷான் குணசேகர, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் கிஹந்த சில்வா, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பிள்ளைகள் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மே மாதம் 13 ஆம் திகதி முதல் நடைபெறும் "புத்த ரஷ்மி வெசாக் வலயத்துடன்" இணைந்து ஜனாதிபதி செயலக வளாகத்தில் வெசாக் கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், மே 14 ஆம் திகதி அங்கு நடைபெற்ற பக்தி பாடல் நிகழ்ச்சியில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கொழும்பு கிராண்ட்பாஸ் வெசாக் பந்தல் பிரதமரால் திறந்துவைப்பு

மகா பிரஜாபதி வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வெசாக் பந்தலின் திறப்பு விழா, மே 12 ஆம் திகதி, வெசாக் பௌர்ணமி போயா தினத்தன்று, கிராண்ட்பாஸ் பலாமரச் சந்தியில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில், பிரித் பாராயணத்திற்கு மத்தியில் நடைபெற்றது.

இந்த வெசாக் பந்தல் ஸ்ரீ வைஷாக்ய சம்புத்தாலோக சங்கத்தால் 54வது முறையாக அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ஊடகப் பிரிவு