இந்திய தொழில்துறை சம்மேளனத்தின் (CII) தலைமை நிர்வாக அதிகாரிகளின் பிரதிநிதிகள் குழு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்திப்பு
இந்திய தொழில்துறை சம்மேளனத்தின் (CII) தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) தூதுக்குழுவிற்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கும் இடையேயான விசேட சந்திப்பு ஜூன் 30ஆம் திகதி இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, குறிப்பாக பொருளாதாரத்தை இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்கும் அதன் வளர்ச்சிக்காகவும் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு குறித்து பிரதமர் தனது பாராட்டினைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் சமீபத்திய இந்திய விஜயத்தின் மூலம் இரு நாடுகளின் பொருளாதார உறவுகள் மேலும் பலப்பட்டுள்ளதாக இந்திய தூதுக்குழு இங்கு மேலும் உறுதிப்படுத்தியது. தொழில்நுட்பம், உற்பத்தி, கல்வி, புத்தாக்கம், .தொழில்முனைவு, விவசாயம், வலுசக்தி மற்றும் சுற்றுலா துறை போன்ற முக்கிய பிரிவுகள் மூலம் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
இளைஞர்களை வலுவூட்டுதல், பெண் தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவு (SME) ஆகியவற்றுக்கு ஆதரவாக செயல்பட நியாயமான முதலீட்டு மூலோபாயங்களின் முக்கியத்துவத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பில் இந்திய உயர்மட்ட தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகளும், இலங்கை பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, வெளியுறவு அமைச்சின் தெற்காசிய மற்றும் சார்க் பிரிவின் பணிப்பாளர் நாயகம் நிலூக்க கதுருகமுவ மற்றும் அதே அமைச்சின் தெற்காசிய பிரிவின் துணை பிரதி பணிப்பாளர் பிரசாந்தி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு