பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

சுதேச பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை அளித்து பிரதமர் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பு...

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட தேசிய விழா ஏப்ரல் 14 ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் கடுவலை, பஹல போமிரியவில் உள்ள சட்டத்தரணி சமன் லீலாரத்னவின் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது காலை 06.44 மணிக்கு இடம்பெறும் வேலை, கொடுக்கல்வாங்கல் மற்றும் உணவு உட்கொள்ளும் சுபவேளையில் ஒரு மா மரத்தை நட்டு பிரதமர் புத்தாண்டு பணிகளை ஆரம்பித்தார்.

சுதேச பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை அளித்து, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சடங்குகள், கிராமிய விளையாட்டுகள், கிராமியப் பாடல்கள் மற்றும் நடனம் ஆகியவை இங்கு இடம்பெற்றன.

இந்த நிகழ்வை புத்த சாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு, கலாசார விவகாரத் திணைக்களம் மற்றும் கடுவலை பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இந்த நிகழ்வில் புத்த சாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், பாராளுமன்ற உறுப்பினர்கள் அசித நிரோஷன மற்றும் கௌசல்யா ஆரியரத்ன உள்ளிட்ட பல விசேட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

"வளமான நாடு, அழகான வாழ்க்கை"க்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட்டுவரும் இவ்வேளையில், மலரும் புத்தாண்டை புதிய எதிர்பார்ப்புடனும், புதிய தொலைநோக்குடனும் வரவேற்போம்.

ஒற்றுமை மற்றும் தாராள சிந்தையுடன் புத்தாண்டைக் கொண்டாடும் இலங்கைத் தாய்நாட்டின் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எமது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் புதுப்பிக்க வேண்டிய தேவையுள்ள நேரத்தில் இப் புத்தாண்டு மலர்கிறது. எமது கலாசாரம் மற்றும் பெறுமானங்களில் வேரூன்றியிருக்கும், நேர்மறையான மாற்றத்தை அடைந்துகொள்வதற்கு, இலக்குகளின் அடிப்படையில் நாம் ஒற்றுமையுடன் முன்னேற வேண்டும் என்பதை இந்த பாரம்பரிய பண்டிகை எமக்கு நினைவூட்டுகிறது.

அண்மைய வரலாற்றில், நாட்டில் எற்பட்ட பொருளாதார நெருக்கடி பலருக்கு புத்தாண்டு கொண்டாட்டம் பற்றி நினைத்தும் பார்க்க முடியாதளவு கடினமாக இருந்ததை நாம் அறிவோம். இருப்பினும், ஊழல் மற்றும் மோசடி சக்கரத்தில் இருந்து விடுபடுவதற்கு மக்களின் துணிச்சலான முயற்சிகள் ஒரு புதிய ஆரம்பத்திற்கு வழி வகுத்துள்ளன.

அதனால்தான் 2025 புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு முக்கிய மைற்கல்லைக் குறித்து நிற்கிறது. இது வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என அனைத்து சமூகங்களும் சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஜனநாயகக் கொள்கைகளின் கீழ் ஒன்றிணைந்துள்ள ஆண்டாகும். எதிர்வரும் மே மாதத்தில் அந்த மக்களின் எதிர்பார்ப்புகள் மீண்டும் கைகூடும் என்பதில் சந்தேகமில்லை.

புலர்ந்திருக்கும் புத்தாண்டில் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பிக்கும் இத்தருணத்தில், அனைத்து பிரஜைகளும் தங்கள் சமூகங்களில் கௌரவம், அமைதி மற்றும் பரிவுணர்வுடன் செயற்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். எதிர்வரும் ஆண்டில் வெற்றி மற்றும் முன்னேற்றத்தை அடைய அர்ப்பணிப்பு, நம்பிக்கை மற்றும் மீளாற்றலுடன் செயற்பட நாம் அனைவரும் உறுதிபூணுவோம்.

மலரும் இந்த சிங்கள தமிழ் புத்தாண்டில் இலங்கை தேசத்திற்கு புதியதோர் மாற்றமும் வளமான எதிர்காலமும் அமைய புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து இலங்கையர்களுக்கும் வலிமையும் ஐக்கியமும் புத்தெழுச்சியும் கிடைக்க எனது பிரார்த்தனைகள்..!

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2025 ஏப்ரல் 14 ஆம் திகதி

நெருக்கடிகளை இனவாத மனநிலையுடன் பார்க்காத அரசாங்கத்தை கட்டியெழுப்பியுள்ளோம். - கலாநிதி ஹரிணி அமரசூரிய

தேசிய மக்கள் சக்தியின் வளமான நாடு அழகான வாழ்க்கை கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளபடி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) விரைவில் இரத்துச் செய்யப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்:

மன்னார் முசலி தேர்தல் தொகுதியில் சிலாவத்துறை பகுதியில் ஏப்ரல் 12 ஆம் திகதி இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்குவது தொடர்பில் அமைச்சரவை ஏற்கனவே ஒரு குழுவை நியமித்துள்ளதாகவும், அதன்படி, எதிர்காலத்தில் இந்தச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் மக்கள் எந்த வகையிலும் பாதிப்புக்குள்ளாக இடமளிக்கப்படமாட்டாது என்றும், ஒரு அரசாங்கம் என்ற வகையில், நெருக்கடிகளை ஒருபோதும் இனவாத மனப்பான்மையுடன் பார்க்கப்பட மாட்டாது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புதிய திட்டங்களை ஆரம்பித்து, கிராமிய மக்களை தேசியப் பொருளாதாரத்தில் ஈடுபடுத்த தேவையான முதலீடுகளை கிராமங்களுக்குக் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புதிய திட்டங்களை ஆரம்பித்து, கிராமிய மக்களை தேசியப் பொருளாதாரத்தில் ஈடுபடுத்த தேவையான முதலீடுகளை கிராமங்களுக்குக் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மன்னார் நானாட்டான் பகுதியில் ஏப்ரல் 12 ஆம் திகதி இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

எமது நாடு ஒரு தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ளது. தேசிய மக்கள் சக்தி மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்ட அரசாங்கம். இந்த நாட்டில் நிலவிய ஊழல் அரசியலை ஒழிக்க இன, மத வேறுபாடுகளைக் கடந்து மக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களித்தனர். இதன் விளைவாக, அனுர குமார திசாநாயக்க 2024 இல் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். அதற்கு ஒரு மாதத்திற்குப் பின்னர், வரலாற்றை மாற்றும் ஒரு பாராளுமன்றத்தை நாங்கள் உருவாக்கினோம். இன்று, அந்த பாராளுமன்றத்தில் நூற்று ஐம்பத்தொன்பது உறுப்பினர்களைக் கொண்ட அரசாங்கம் உள்ளது. இன்று பாராளுமன்றத்தில் ஊழலுக்கு எதிரான ஒரு பெரிய குழு உள்ளது. அனைத்து இனங்கள், மதங்கள் மற்றும் பிராந்தியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசாங்கம் இன்று அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தனிக் கட்சி அரசாங்கத்தை அமைத்து அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துவது இதுவே முதல் முறை. இந்த வெற்றிகள் அனைத்தும் மக்களால் அடையப்பட்டன, வெற்றியாளர்கள் மக்களே.

மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் பாதுகாத்து அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நாங்கள் நாட்டைக் பொறுப்பேற்கும்போது பொருளாதாரம் எவ்வளவு பலவீனமாக இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். உலகிற்கு முன்பாக நாம் வங்குரோத்து நிலையை அடைந்த நாடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டோம். இலங்கையில் பல ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி இருக்கவில்லை. எதிர்மறையான பொருளாதாரமே இருந்தது. சுற்றுலாத் துறை வீழ்ச்சியடைந்திருந்தது. அரசியல் அதிகாரத்தில் இருந்த ஊழல் காரணமாக முதலீட்டாளர்கள் இந்த நாட்டிற்கு வரத் தயங்கினர். இன்று, நாம் அதையெல்லாம் மாற்றி, வங்குரோத்து நிலை என்ற முத்திரையை உத்தியோகபூர்வமாக அகற்றுவதில் வெற்றி பெற்றுள்ளோம். பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்த முடிந்துள்ளது. முதலீட்டாளர்கள் வரத் தொடங்கியுள்ளனர். சர்வதேச அளவில் எம் மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புதிய திட்டங்களை ஆரம்பித்து, கிராமிய மக்களை தேசியப் பொருளாதாரத்தில் ஈடுபடுத்த தேவையான முதலீடுகளை கிராமங்களுக்குக் கொண்டு வர நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவுசெலவுத்திட்டத்தை நாம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றினோம். பொருளாதாரம் இன்னும் வலுவாக இல்லாவிட்டாலும், வரவுசெலவுத்திட்டத்தில் இரண்டு முக்கிய விடயங்களை நிறைவேற்ற விரும்பினோம். ஒன்று பொருளாதார அபிவிருத்திக்கு தேவையான உட்கட்டமைப்பை மேம்படுத்துவது, அடுத்தது பொருளாதார சிக்கல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை அதிகரிப்பது.எனவேதான் நாங்கள் அஸ்வெசும வளங்கும் அளவை அதிகரித்ததுடன், காலப்பகுதியையும் நீடித்தோம். அஸ்வெசும இருந்தாலும் இல்லாவிட்டாலும், முன்னூறுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் உள்ள பிள்ளைகளுக்கு புத்தகங்களை வாங்க வவுச்சர்களை வழங்கினோம், மேலும் சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்த நாங்கள் தலையிட்டோம்.

முன்னைய அரசாங்கங்கள் மக்கள் மீது சுமையாக இருந்தன. ஆனால் இன்று எம்மிடம் மிகவும் சிறிய அமைச்சரவை உள்ளது. எங்கள் அரசாங்கம் உங்களுக்கு ஒரு சுமையாக இல்லை. செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன, வீண்விரயம் குறைக்கப்பட்டுள்ளது. திருட்டுகள் இடம்பெறுவது இல்லை.

மக்களுக்கு சுமையாக இல்லாத அத்தகைய அரசாங்கத்தால்தான் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்தது. இந்த வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று, அரச ஊழியர்கள் நல்ல சம்பளம் பெறக்கூடிய நிலையை அடைந்துள்ளனர். அரச ஊழியர்கள் சுதந்திரமாக தங்களது பணிகளை செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியல் நலன்களை அடிப்படையாகக் கொண்டு அல்லாமல், தரவுகளின் அடிப்படையில் மக்களுக்காக முடிவுகளை எடுக்கும் வாய்ப்பை நாங்கள் அரச ஊழியர்களுக்கு வழங்கியுள்ளோம். அத்தகைய ஒரு சுயாதீன அரச சேவையை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். மக்கள் நேய அரசாங்கத்தைப்போன்றே, மக்கள் நேய அரசாங்க சேவையும் தேவை. வீண்விரயம் மற்றும் திருட்டு இல்லாத திறமையான, மக்கள் நேய அரச ஊழியர்கள் எமக்குத் தேவை. அதற்குத் தேவையான சூழலை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அதிக அளவு நிதி ஒதுக்கியுள்ளோம். அந்தப் பணம் மக்களுக்கு முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டுமானால், உள்ளூராட்சி மன்றமும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். கிராமத்தில் உள்ள தலைவர்கள் திருடர்களாக இருந்தால், அந்தப் பணத்தை ஒதுக்குவதால் எந்தப் பலனும் இருக்காது. இதனால்தான் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஷ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லத்தம்பி திலகநாதன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி வேட்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

மோதல்களால் மக்கள் இனியும் பாதிக்கப்படக்கூடாது, நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு, அரசாங்கத்தைப் போன்றே அரசாங்க சேவையும் மக்களுக்காக பணியாற்ற வேண்டும்

நாட்டில் உருவாக்கப்படும் மோதல்களால் மக்கள் இனியும் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகக் கூடாது என்றும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும், மக்களின் தேவைகளை நிறவேற்றுவதற்கு அரசாங்கத்தைப் போன்றே அரசாங்க சேவையும் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், வேலணை, நீர்வேலி மற்றும் வடமராட்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

வட மாகாணத்தில் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் பல சிக்கல்கள் உள்ளன. வீதிகள், நீர், விவசாயம், வேலைவாய்ப்பின்மை, கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் பிரச்சினைகள் உள்ளன.

இந்தப் பிரச்சினைகளில் பல, உங்கள் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபைகள் மற்றும் மாகாண சபைகளால் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகளாகும். ஆனால் அது சரியாக நடைபெறவில்லை.

வடக்கு, கிழக்கில் உள்ள பிரச்சினைகள் போரினால் ஏற்பட்டவை என்று கூறினார்கள். போர் முடிந்து 16 ஆண்டுகள் ஆகின்றன, ஆனால் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது? இந்தப் பகுதிகளில் மக்களின் வாழ்க்கை நிலை முன்னேற்றமடைந்துள்ளதா?

உள்ளூராட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால், குறித்த திட்டங்களுக்குப் பணம் சரியாகச் செலவிடப்படுவதை உறுதி செய்வதற்கு ஒரு வெளிப்படையான பொறிமுறை தேவை.

மே மாதம் 6 ஆம் திகதி கிராமத்தை அபிவிருத்தி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை நிலையை மேம்படுத்த உங்களுக்கு மிக நெருக்கமான மிகச்சிறிய அரசாங்கத்தை நியமிக்கும் முக்கிய உரிமை உங்களுக்கு கிடைத்துள்ளது. மோசடி அல்லது ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்புள்ள பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுங்கள்.

நாடு வீழ்ந்திருக்கும் சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கும், பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கும் அரசாங்கம் தற்போது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எல்லா விடயங்களும் இன்னும் சரியாக நடக்கவில்லை என்பதும், பொருட்களின் விலைகள் இன்னும் குறையவில்லை என்பதும் எங்களுக்குத் தெரியும். அரசாங்கம் அவற்றையெல்லாம் மாற்றி வருகிறது எதிர்காலத்தில் மக்கள் அந்த பயன்களைப் பெறுவார்கள்.

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அரசாங்க சேவை மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். மக்களின் அரசாங்கத்தைப் போலவே, மக்களின் அரசாங்க சேவை என்ற நிலை உருவாக வேண்டும்.

சுதந்திரத்திற்குப் பின்னர், இந்த நாட்டில் பெரும் இரத்தக்களரி ஏற்பட்டது. மோதல்கள் ஏற்பட்டன. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இந்த நாட்டில் மீண்டும் அந்த நிலை ஏற்படாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும். நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசத்தின் பிரதிநிதிகள் உட்பட வட மாகாணத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இந்தக் மக்கள் சந்திப்புகளில் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் நிதியை கிராமிய அபிவிருத்திக்காக வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்த தூய்மையான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்குவதற்கு முன்வாருங்கள் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் நிதியை கிராமிய அபிவிருத்திக்காக வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்த தூய்மையான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்குவதற்கு முன்வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணம் கரைநகரில் இன்று (11) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

இந்த நாடு வளமான கலாச்சார மரபுகளைக் கொண்ட நாடு, எமக்கு ஒரு வளமான வரலாறு உண்டு.

கரைநகர் பற்றி எனக்குக் கிடைத்த தகவல்களால் நான் மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன். 1977 ஆம் ஆண்டில், கரைநகரில் சுமார் 80,000 பேர் வசித்திருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்று 10,500 பேர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு என்ன ஆனது? அவ்வாறே வட மாகாணத்தில் வசதி படைத்தவர்களும் படித்தவர்களும் கரைநகரில் வசிக்கிறார்கள் என்றும் நான் அறிந்தேன், அது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஆனால் பிரச்சினை என்னவென்றால், அவர்கள் கற்கவும், செல்வந்தர்களாகவும், ஏதாவது வேலை செய்யவும் கரைநகரை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

அவ்வாறு செல்ல முடியாமல்போனவர்களைப் பற்றி யார் பேசுவது? அவர்கள் எமது நாட்டின் குடிமக்கள், ஏனைய அனைவரையும் போலவே அவர்களுக்கும் சம உரிமைகள் இருக்க வேண்டும். கல்வி அமைச்சர் என்ற முறையில் கரைநகரில் கல்வி நிலை குறித்து கேட்டறிந்தேன். அதன் போது, உயர்தர கல்வியை வழங்கும் இரண்டே இரண்டு பாடசாலைகள் தான் உள்ளன என்பதை அறிந்தேன். இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். மேலும், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் அனைத்துப் பிள்ளைகளும் கரைநகரை விட்டு வெளியேறி மேலதிக கல்விக்காக யாழ்ப்பாணம் செல்கின்றனர்.

இதுவரை, இந்த நாட்டில் அரசாங்கங்கள் இருந்தன, ஜனாதிபதிகள் இருந்திருக்கிறார்கள், தேசிய அரசாங்கங்கள் இருந்தன, இந்தப் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருக்கிறார்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் இருந்தன, மாகாண அரசாங்கங்கள் இருந்தன. ஆனால் கரைநகர் மக்களின் கல்வியை மேம்படுத்த அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?

கல்வி மூலமே மக்களின் பெறுமானங்கள் அதிகரிக்கின்றன, மேலும் கல்வி மூலமே மக்கள் செழிப்படைகிறார்கள். கல்வி மிகவும் முக்கியமானது, ஆனால் இந்தப் பிரதேசம் பல தசாப்தங்களாக தரமான கல்விக்கான உரிமையை இழந்துள்ளது. மேலும், இந்தப் பகுதியில் தண்ணீர்ப் பிரச்சினையும் உள்ளது. தண்ணீர் ஒரு அடிப்படைத் தேவை, மக்கள் சுத்தமான தண்ணீரைப் பெற பணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்தப் பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் ஊழல் காரணமாக ஒருபோதும் நிறைவு செய்ய முடியவில்லை.

பிரதேச மட்டத்தில், வீதிகள், போக்குவரத்து உள்ளிட்ட பல விடயங்கள் ஊழல் காரணமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. போர் முடிந்து 16 ஆண்டுகள் ஆகின்றன, அன்றும் இன்றும் என்ன வித்தியாசம் ஏற்பட்டுள்ளது? ஏன் இந்தப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை? இதனால்தான் உள்ளூராட்சித் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பிரதேச மட்டத்தில் உள்ள பிரச்சினைகள் உள்ளூராட்சி நிறுவனங்களால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் எமது அரசாங்கத்தின் முதலாவது வரவுசெலவுத் திட்டத்தை நாங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றினோம். அதன்மூலம் கல்வி, சுகாதாரம், பொதுமக்கள் நலன், உட்கட்டமைப்பு, பொது போக்குவரத்து போன்ற அனைத்திற்கும் அனைத்து உள்ளூராட்சி கணக்குகளுக்கும் அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பணத்தை விவேகத்துடன் செலவிட வேண்டும்.

அதற்கு, ஊழல் இல்லாத தூய்மையான நிர்வாகம் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு தேவை. எனவே, இந்தத் தேர்தலில், ஊழல் மற்றும் மோசடி இல்லாத மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு குழுவை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். 2024 ஆம் ஆண்டில், இந்த நாட்டு மக்கள் ஏற்கனவே இருந்த அரசியல் கலாசாரத்தைமாற்ற முடிவு செய்தனர். மீண்டும் மே 6 ஆம் திகதி மக்கள் தங்கள் கிராமத்திற்காக சிந்தித்து முடிவுகளை எடுப்பதற்கான ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்,

இன்று, நாம் எதிர்பார்த்த அரசியல் பண்பாடு இந்த நாட்டில் உருவாகியுள்ளது. முன்னைய அரசாங்கங்களின் ஆட்சியாளர்களைப் போல தங்களை வளப்படுத்திக்கொள்ள தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் செயற்படப்போவதில்லை. இன்றைய அரசாங்கத்தில் தங்கள் சம்பளத்தை கூட திருப்பி அளிக்கும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர்.

அரச ஊழியர்கள் இன்று அதிக சம்பளம் பெறுகிறார்கள். மக்களுக்காக அனைத்து சாத்தியமான நேர்மறையான தீர்மானங்களையும் அரசாங்கம் எடுத்து வருகிறது.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீ பவன் மற்றும் இளங்குமரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு