ஒரு நாட்டின் இறைமையையும் தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் உணவுப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தற்கால உலகில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் விவசாயத்துறையானது பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளதாகவும், ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது அந்நாட்டின் ஸ்திரத்தன்மை, இறைமை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணியாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தினதும் (IFAD) இலங்கை அரசாங்கத்தினதும் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் ’சிறு அளவிலான விவசாய முயற்சிப் பங்காளித்துவத் திட்டத்தின்’ (SAPP) ஊடாக, கிராமப்புற இளைஞர், யுவதிகளை விவசாய முயற்சிகளில் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட "SAPP" தேசிய இளைஞர் விவசாய - முயற்சிக் கண்காட்சி மற்றும் வர்த்தகங்களுக்கிடையிலான (B2B) தொடர்பாடல் மாநாட்டில் உரையாற்றும் போதே பிரதமர் இன்று (28) முற்பகல் பத்தரமுல்லை வொட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் வைத்து இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய பிரதமர்:

நாட்டில் காணப்படுகின்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இவ்விழாவை ஏற்பாடு செய்தமையைப் பாராட்டுகின்றேன். நாட்டின் விவசாயத் துறைக்கும் பொருளாதாரத்திற்கும் நீங்கள் அனைவரும் மிக முக்கியமான பங்களிப்பை ஆற்றி வருகின்றீர்கள். உங்களைப் போன்ற திறமைமிக்க விவசாய முயற்சியாளர்களைக் காணக் கிடைத்ததையிட்டுப் பெருமிதம் கொள்கின்றேன்.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட உணவுப் பாதுகாப்பு, ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பிலும் பெரும் தாக்கத்தைச் செலுத்துகின்றது. ’Grow and Sell’ போன்ற எண்ணக்கருக்களினால் உற்பத்திப் பொருளாதாரம் பலம்பெறுகின்றது.

கொவிட் நெருக்கடி காலத்திலோ அல்லது தற்போதைய மத்திய கிழக்கு யுத்த சூழல்களின் போதோ நாடுகளின் உணவுப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாவிடின், அந்நாடுகளின் பொருளாதாரம் சவாலுக்குள்ளாகும். குறிப்பாக, தலைவர்களின் சிறிய தீர்மானங்களினால் கூட விநியோகச் சங்கிலி பாதிக்கப்படக்கூடும்.

அதேபோல், காலநிலை மாற்றங்களினாலும் விவசாயத்திற்குப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. காலநிலை மற்றும் சுற்றாடல் நிலைமைகளை முன்கூட்டியே எதிர்வு கூறுவது கடினமாகும்போது விவசாயத் துறை பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில், நாட்டின் பொருளாதாரத்தில் விவசாய முயற்சியாளர்களாகிய உங்களது பங்களிப்பு என்பது வெறும் பணம் சம்பாதிப்பது மாத்திரமல்ல, நாட்டின் உணவுப் பாதுகாப்பின் ஊடாகத் தேசியப் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் ஒரு பங்களிப்புமாகும். உங்களது திறமைகளை வெளிப்படுத்துவது உங்களுக்கு மாத்திரமன்றி நாட்டு மக்களுக்கும் மிகவும் முக்கியமானதாக அமைகின்றது, எனத் தெரிவித்தார்.

IFAD மற்றும் SAPP போன்ற நிறுவனங்களின் பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்த பிரதமர், ஆற்றல்மிக்க இளைஞர் சமூகத்திற்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்கிரமசிங்க, அமைச்சின் மேலதிக செயலாளர் லதீஷா பிரியந்தி, SAPP பணிப்பாளர் சுனிமல் சந்திரசிறி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு