நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புதிய திட்டங்களை ஆரம்பித்து, கிராமிய மக்களை தேசியப் பொருளாதாரத்தில் ஈடுபடுத்த தேவையான முதலீடுகளை கிராமங்களுக்குக் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புதிய திட்டங்களை ஆரம்பித்து, கிராமிய மக்களை தேசியப் பொருளாதாரத்தில் ஈடுபடுத்த தேவையான முதலீடுகளை கிராமங்களுக்குக் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மன்னார் நானாட்டான் பகுதியில் ஏப்ரல் 12 ஆம் திகதி இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

எமது நாடு ஒரு தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ளது. தேசிய மக்கள் சக்தி மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்ட அரசாங்கம். இந்த நாட்டில் நிலவிய ஊழல் அரசியலை ஒழிக்க இன, மத வேறுபாடுகளைக் கடந்து மக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களித்தனர். இதன் விளைவாக, அனுர குமார திசாநாயக்க 2024 இல் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். அதற்கு ஒரு மாதத்திற்குப் பின்னர், வரலாற்றை மாற்றும் ஒரு பாராளுமன்றத்தை நாங்கள் உருவாக்கினோம். இன்று, அந்த பாராளுமன்றத்தில் நூற்று ஐம்பத்தொன்பது உறுப்பினர்களைக் கொண்ட அரசாங்கம் உள்ளது. இன்று பாராளுமன்றத்தில் ஊழலுக்கு எதிரான ஒரு பெரிய குழு உள்ளது. அனைத்து இனங்கள், மதங்கள் மற்றும் பிராந்தியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசாங்கம் இன்று அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தனிக் கட்சி அரசாங்கத்தை அமைத்து அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துவது இதுவே முதல் முறை. இந்த வெற்றிகள் அனைத்தும் மக்களால் அடையப்பட்டன, வெற்றியாளர்கள் மக்களே.

மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் பாதுகாத்து அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நாங்கள் நாட்டைக் பொறுப்பேற்கும்போது பொருளாதாரம் எவ்வளவு பலவீனமாக இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். உலகிற்கு முன்பாக நாம் வங்குரோத்து நிலையை அடைந்த நாடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டோம். இலங்கையில் பல ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி இருக்கவில்லை. எதிர்மறையான பொருளாதாரமே இருந்தது. சுற்றுலாத் துறை வீழ்ச்சியடைந்திருந்தது. அரசியல் அதிகாரத்தில் இருந்த ஊழல் காரணமாக முதலீட்டாளர்கள் இந்த நாட்டிற்கு வரத் தயங்கினர். இன்று, நாம் அதையெல்லாம் மாற்றி, வங்குரோத்து நிலை என்ற முத்திரையை உத்தியோகபூர்வமாக அகற்றுவதில் வெற்றி பெற்றுள்ளோம். பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்த முடிந்துள்ளது. முதலீட்டாளர்கள் வரத் தொடங்கியுள்ளனர். சர்வதேச அளவில் எம் மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புதிய திட்டங்களை ஆரம்பித்து, கிராமிய மக்களை தேசியப் பொருளாதாரத்தில் ஈடுபடுத்த தேவையான முதலீடுகளை கிராமங்களுக்குக் கொண்டு வர நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவுசெலவுத்திட்டத்தை நாம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றினோம். பொருளாதாரம் இன்னும் வலுவாக இல்லாவிட்டாலும், வரவுசெலவுத்திட்டத்தில் இரண்டு முக்கிய விடயங்களை நிறைவேற்ற விரும்பினோம். ஒன்று பொருளாதார அபிவிருத்திக்கு தேவையான உட்கட்டமைப்பை மேம்படுத்துவது, அடுத்தது பொருளாதார சிக்கல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை அதிகரிப்பது.எனவேதான் நாங்கள் அஸ்வெசும வளங்கும் அளவை அதிகரித்ததுடன், காலப்பகுதியையும் நீடித்தோம். அஸ்வெசும இருந்தாலும் இல்லாவிட்டாலும், முன்னூறுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் உள்ள பிள்ளைகளுக்கு புத்தகங்களை வாங்க வவுச்சர்களை வழங்கினோம், மேலும் சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்த நாங்கள் தலையிட்டோம்.

முன்னைய அரசாங்கங்கள் மக்கள் மீது சுமையாக இருந்தன. ஆனால் இன்று எம்மிடம் மிகவும் சிறிய அமைச்சரவை உள்ளது. எங்கள் அரசாங்கம் உங்களுக்கு ஒரு சுமையாக இல்லை. செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன, வீண்விரயம் குறைக்கப்பட்டுள்ளது. திருட்டுகள் இடம்பெறுவது இல்லை.

மக்களுக்கு சுமையாக இல்லாத அத்தகைய அரசாங்கத்தால்தான் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்தது. இந்த வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று, அரச ஊழியர்கள் நல்ல சம்பளம் பெறக்கூடிய நிலையை அடைந்துள்ளனர். அரச ஊழியர்கள் சுதந்திரமாக தங்களது பணிகளை செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியல் நலன்களை அடிப்படையாகக் கொண்டு அல்லாமல், தரவுகளின் அடிப்படையில் மக்களுக்காக முடிவுகளை எடுக்கும் வாய்ப்பை நாங்கள் அரச ஊழியர்களுக்கு வழங்கியுள்ளோம். அத்தகைய ஒரு சுயாதீன அரச சேவையை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். மக்கள் நேய அரசாங்கத்தைப்போன்றே, மக்கள் நேய அரசாங்க சேவையும் தேவை. வீண்விரயம் மற்றும் திருட்டு இல்லாத திறமையான, மக்கள் நேய அரச ஊழியர்கள் எமக்குத் தேவை. அதற்குத் தேவையான சூழலை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அதிக அளவு நிதி ஒதுக்கியுள்ளோம். அந்தப் பணம் மக்களுக்கு முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டுமானால், உள்ளூராட்சி மன்றமும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். கிராமத்தில் உள்ள தலைவர்கள் திருடர்களாக இருந்தால், அந்தப் பணத்தை ஒதுக்குவதால் எந்தப் பலனும் இருக்காது. இதனால்தான் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஷ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லத்தம்பி திலகநாதன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி வேட்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு