கலாசார பன்முகத்தன்மையை மதிக்கும் மனிதநேயமிக்க எதிர்கால தலைமுறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மே மாதம் 16 ஆம் திகதி மாத்தறை ஊராபொல சிறி ரதனஜோதி பிரிவெனாவின் வஜ்ர ஜயந்தி (பவள விழா) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். நாட்டின் கலாசார பன்முகத்தன்மையை மதிக்கும், சூழல் நேய மனப்பான்மையை வளர்க்கும், கல்வி அறிவைப் பெற்ற, மனிதநேயமுள்ள ஒரு எதிர்கால தலைமுறையை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

புதிய மறுமலர்ச்சி யுகத்திற்கான அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு அரசியல், பொருளாதாரம், சமயம், கல்வி மற்றும் கலாசாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் நீட்சிகொண்டுள்ளது என்றும், பிரிவேனா கல்வி முறையில் தற்போது நிலவும் நெருக்கடிகளை துல்லியமாகக் கண்டறிந்து, அவற்றில் முறையாகத் தலையிட அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

ராஜகீய பண்டித கம்புருபிட்டியே வனரத்ன மகா நாயக்க தேரர் நினைவு அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவும் பிரதமரின் தலைமையில் நடைபெற்றதுடன், ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட "ருவந்தோ" மலர் சங்கைக்குரிய ஸ்ரீ ரோஹண சங்க சபையின் பிரதிச் செயலாளர் கோனதெனியே தபஸ்ஸி தேரரினால் பிரதமருக்கு வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஷியாமோபாலி வங்சிக மகாநிகாயவின் ஸ்ரீ ரோஹண பிரிவின் மகாநாயக்கர் சங்கைக்குரிய அகலக்கட பியசிறி மகாநாயக்க தேரர், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பௌத்த மற்றும் பாலி கற்கைத் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அக்க மகா பண்டித சங்கைக்குரிய கோட்டபிட்டியே ராகுல தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், தென் மாகாண ஆளுநர் எம்.கே. பந்துல ஹரிச்சந்திர மற்றும் பல விசேட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு