புத்த ரஷ்மி வெசாக் வலயத்தை ஒழுங்கமைப்பதற்கான இறுதிக் கலந்துரையாடல் பிரதமரின் செயலாளர் தலைமையில் இடம் பெற்றது.

கொழும்பு கங்காராம விகாரையை மையப்படுத்தி இம்முறை நடத்தப்படும் புத்த ரஷ்மி வெசாக் வலயம் பற்றிய இறுதிக் கலந்துரையாடல், மே 20 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, குறிப்பாகப் புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் வெசாக் வலயம் நடைபெறும் காலப்பகுதியில் மின்சக்திப் பயன்பாடு குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

பிரதமரின் தலைமையில் கூடிய அரச சேவையினை நேர்த்தியாக முன்னெடுத்துச் செல்வதற்கான குழுவினால், மின்சாரப் பயன்பாட்டிற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை வெசாக் வாரத்தில் தளர்த்துவது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, புத்த ரஷ்மி வெசாக் வலயச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனப் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்கள் தெரிவித்தார்.

அதற்கமைய, குறைந்த எரிபொருள் மற்றும் மின்சாரச் செலவில், அலங்கார வழிபாடுகளை விட ஆன்மீக வழிபாடுகள் மூலம் பக்தர்களின் மனதை மகிழ்விக்கும் வகையில் வெசாக் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுமென, கொழும்பு கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி வணக்கத்துக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் தெரிவித்தார். மேலும், இம்முறை வெசாக் வலயம் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி வணக்கத்துக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர், முப்படைகள், இலங்கை பொலிஸ், சிவில் பாதுகாப்புத் திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம், வலுசக்தி அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு