"Reimagining International Relations from a Global South Perspective" உலகளாவிய தெற்குக் கண்ணோட்டத்தில் சர்வதேச உறவுகளை மீள்கற்பனை செய்தல், எனும் இந்த நூல், கொள்கை வகுப்பு, இராஜதந்திரம் மற்றும் உலகளாவிய நிர்வாகம் குறித்த முக்கிய நுண்ணறிவுகளை வழங்குகின்ற ஒரு காலோசிதமான, காத்திரமான பங்களிப்பாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிறுவனத்தின் (BCIS) புதிய வெளியீடான இந்நுால் வெளியீட்டு விழா, பெப்ரவரி 24ஆம் திகதி BCIS கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியரும், BCIS நிறுவனத்தின் முகாமைத்துவ மற்றும் கல்வி விவகாரச் சபையின் உறுப்பினருமான ஓய்வுபெற்ற சிறப்புநிலை பேராசிரியர் காமினி கீரவெல்லவினால் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. உலகளாவிய தெற்குக் கண்ணோட்டத்தில் சர்வதேச உறவுகளை மீள்கற்பனை செய்யும் வகையில் இந்நூல் மிகக் காத்திரமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நூல் வெளியீட்டிற்காகத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், உலகளாவிய தெற்குக் கண்ணோட்டத்தில் சர்வதேச உறவுகள் எவ்வாறு மீள்கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கும், அதன் பல்வேறு பாதைகளைக் கண்டறிவதற்கும் இந்த வெளியீடு ஒரு காலோசிதமான, முக்கியமான பங்களிப்பாக அமைகிறது எனக் குறிப்பிட்டார். சர்வதேச உறவுகளை ஒரு உண்மையான பன்முகத்தன்மை கொண்ட துறையாக மீள்வரைவு செய்ய இந்நூல் அழைப்பு விடுப்பதாகவும், இது சர்வதேச உறவுகள் என்ற துறைக்கு மாத்திரமன்றி அனைத்துப் பாடத்துறைகளுக்கும் பொருந்தும் ஒரு விடயம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிறுவனத்தின் (BCIS) தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, இராஜதந்திர சமூகத்தின் உறுப்பினர்கள், பண்டாரநாயக்க தேசிய ஞாபகார்த்த அறக்கட்டளை முகாமைத்துவ சபையின் பிரதிநிதிகள், BCIS நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கல்விமான்கள், அதிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு