நாட்டிற்குப் பொருத்தமான ஒரு சிறந்த பிரஜையை உருவாக்குவதற்குத் தேவையான தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கே அரசாங்கம் முயற்சி எடுத்து வருகின்றது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாட்டிற்குப் பொருத்தமான ஒரு சிறந்த பிரஜையை உருவாக்குவதற்குத் தேவையான தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கே அரசாங்கம் முயற்சி எடுத்து வருவதாகவும், தரமான கல்வியை வழங்குவதென்பது பாடத்திட்ட மாற்றத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டது அல்ல என்றும் பிரதமர் தெரிவித்தார். அது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கிடைக்க வேண்டிய அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கி ஆரம்பிக்கப்பட வேண்டிய, நீண்ட காலம் எடுக்கக்கூடிய ஒரு பாரிய பணியாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

’திட்வா’ சூறாவளியினால் கடும் பாதிப்புக்குள்ளான சிலாபம் சேனாநாயக்க தேசிய பாடசாலையைப் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, அகில இலங்கை ரீதியில் வெற்றிகளைப் பெற்றுக்கொண்ட அவ்வித்தியாலய மாணவர்களுக்குப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தரமான கல்வியைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இப்பாடசாலைக்கு ஒரு நீண்ட கால வரலாறு இருக்கின்றது. சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர அவர்கள் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்திய சந்தர்ப்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பாடசாலைக் கட்டமைப்பிற்குள் உள்ளடங்கிய 54 பாடசாலைகளில் இதுவும் ஒன்றாகும்.

கன்னங்கர அவர்கள் ஒரு பாரிய தொலைநோக்கின் அடிப்படையிலேயே இலவசக் கல்வியைக் கொண்டு வந்தார். அதன் மூலம் நாட்டிற்குத் தேவையான சிறந்த பிரஜையை உருவாக்குவதற்கான தரமான கல்விக்கான அணுகுமுறையை உறுதிப்படுத்துவதே எதிர்பார்ப்பாக இருந்தது. இருப்பினும் இன்று போலவே அன்றைய காலத்திலும் தனிப்பட்ட இலாபங்களைப் பெற்றுக்கொண்ட ஒரு தரப்பினர் இலவசக் கல்விக்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், நான் பாராளுமன்ற நூலகத்திலுள்ள இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட போது இடம்பெற்ற பாராளுமன்ற விவாதங்களை வாசித்துப் பார்த்தேன். அதில் சில தலைவர்களின் கூற்றுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இலவசக் கல்வியினால் தமது தோட்டத்தில் ஒரு தேங்காயைப் பறித்துக்கொள்ளக்கூடப் படிப்பறிவற்ற ஒருவரைத் தேடிக்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்பதாலேயே அவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்கள்.

இச்சந்தர்ப்பத்தில் நான் மற்றுமொரு விடயத்தையும் அறிந்துகொண்டேன். சகோதரர் வெனுர எதிரிசிங்க இப்பாடசாலையிலேயே கல்வி கற்றிருக்கின்றார். வெனுர எதிரிசிங்க அவர்கள் அடுத்த சந்ததியினருக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காகவும், பிறரது நலனுக்காகவும் போராடித் தனது உயிரைத் தியாகம் செய்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவ்வாறான உன்னத நோக்கங்களைக் கொண்ட கதாபாத்திரங்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால், எமது நாடு இன்றுள்ள நிலையில் அல்லாமல் மிகச் சிறந்த நிலையில் இருந்திருக்கும்.

இவ்வாறான உன்னத நோக்கங்களைக் கொண்ட இளைஞர்கள் தமது உயிரைத் தியாகம் செய்ய வேண்டிய ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு நாம் விரும்பவில்லை. அவ்வாறான சிறந்த பண்புகளைக் கொண்ட ஆயிரக்கணக்கான குடிமக்களை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

உங்களது திறமைகள் மற்றும் ஆற்றல்களின் அடிப்படையில் மிக உயர்ந்த நிலைகளை எட்டக்கூடிய ஒரு பொருத்தமான சூழலையும் கல்வி முறைமையையும் உருவாக்குவதே எமது நோக்கமாகும். தனக்காக மாத்திரம் அல்லாது தான் சார்ந்த சமூகத்தை மாற்றுவதற்கும், சமூகத்திற்குத் தலைமைத்துவத்தை வழங்குவதற்கும், ஒரு நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும், பிறரைப் புரிந்துகொள்ளும் ஆற்றலுள்ள, மனிதநேயம் மிக்க குடிமக்களை உருவாக்குவதையே எமது கல்விக் கொள்கையின் மூலம் நாம் எதிர்பார்க்கின்றோம்.

இத்தகைய சிறந்த வரலாற்றைக் கொண்ட இப்பாடசாலையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். நாட்டுக்கு மாத்திரமன்றி உலகிற்கே முக்கியமான ஒரு பாடசாலையாக இதனை மாற்றியமைக்க உங்களால் முடியும் என நான் நம்புகின்றேன். பல்வேறு தடைகள் மற்றும் சவால்களுக்கு முகம் கொடுத்த சிலாபம் கல்வி வலயத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அதற்கான சக்தியும் தைரியமும் இருக்கின்றது என்பது புலப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான கயான் ஜானக, ஹிருணி விஜேசிங்க, முஹம்மது பைசல் மற்றும் சிலாபம் சேனாநாயக்க தேசிய பாடசாலையின் அதிபர் எஸ்.பி.என்.எஸ். பத்திரண உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு