சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட தேசிய விழா ஏப்ரல் 14 ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் கடுவலை, பஹல போமிரியவில் உள்ள சட்டத்தரணி சமன் லீலாரத்னவின் இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது காலை 06.44 மணிக்கு இடம்பெறும் வேலை, கொடுக்கல்வாங்கல் மற்றும் உணவு உட்கொள்ளும் சுபவேளையில் ஒரு மா மரத்தை நட்டு பிரதமர் புத்தாண்டு பணிகளை ஆரம்பித்தார்.
சுதேச பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை அளித்து, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சடங்குகள், கிராமிய விளையாட்டுகள், கிராமியப் பாடல்கள் மற்றும் நடனம் ஆகியவை இங்கு இடம்பெற்றன.
இந்த நிகழ்வை புத்த சாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு, கலாசார விவகாரத் திணைக்களம் மற்றும் கடுவலை பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இந்த நிகழ்வில் புத்த சாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், பாராளுமன்ற உறுப்பினர்கள் அசித நிரோஷன மற்றும் கௌசல்யா ஆரியரத்ன உள்ளிட்ட பல விசேட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு