வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இரு தோரணங்கள் பிரதமரால் திறந்து வைப்பு

மே மாதம் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, கொழும்புப் பகுதியில் அமைக்கப்பட்ட இரண்டு வெசாக் தோரணங்கள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.

பொரளை மகசின் ஐக்கிய வர்த்தகர்களின் ஸ்ரீ வைசாக்ய சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட “சம்புலா ஜாதகக் கதை” அடங்கிய தோரணத்தைப் பிரதமர் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, கிராண்ட்பாஸ் பலாமரச் சந்தியில் அமைக்கப்பட்ட “சமுத்திர வாணிஜ ஜாதகக் கதையை” மையமாகக் கொண்ட தோரணத்தையும், சம்பிரதாய முறைப்படி தேங்காய் எண்ணெய் விளக்கேற்றி ஒளியூட்டித் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், ஏனைய மத குருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் நஜித் இந்திக, சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, திலித் ஜயவீர, பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்தூவ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்தோடு, மகசின் ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவர் பாலித ஹேரத் உள்ளிட்ட வர்த்தக சங்கங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், பிரதேச மக்கள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு