உலகப் பொருளாதார மன்றத்தில் ஐரோப்பிய ஒன்றியம், UNDP மற்றும் பெருநிறுவனத் தலைவர்களுடன் பிரதமர் உயர்மட்டச் சந்திப்பு

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) 56ஆவது வருடாந்தக் கூட்டத்திற்குச் சமாந்தரமாக, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் ஜனவரி 21ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) மற்றும் உலகளாவிய தனியார் துறைப் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியான உயர்மட்ட இருதரப்புச் சந்திப்புகளை மேற்கொண்டார்.

தயார்நிலை மற்றும் நெருக்கடி முகாமைத்துவத்திற்கான ஐரோப்பிய ஆணையாளர் ஹட்ஜா லாபிப் (Hadja Lahbib) அவர்களைச் சந்தித்த பிரதமர், ’திட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் வழங்கிய ஆதரவிற்காகத் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், உலக வங்கியின் ’GRADE’ அறிக்கையின் முக்கிய முடிவுகள் குறித்து ஆணையாளருக்கு விளக்கமளித்த பிரதமர், இலங்கையின் அபிவிருத்தி மற்றும் மீட்சி முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ச்சியான ஆதரவைக் கோரினார்.

அதனைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) நிர்வாகியாகப் பொறுப்பேற்றுள்ள அலெக்சாண்டர் டி குரூ (Alexander De Croo) அவர்களைச் சந்தித்த பிரதமர், இலங்கைக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பங்களிப்பைப் பாராட்டியதோடு, வெள்ள நிவாரணம் மற்றும் வாழ்வாதார உதவிகளில் ஐக்கிய நாடுகள் வழங்கிய ஒத்துழைப்பிற்கும் பாராட்டு தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தலின் ஊடாகப் பெற்ற மக்கள் ஆணையைத் தொடர்ந்து, பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் நல்லாட்சியை அடிப்படையாகக் கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். அத்துடன், சமூகப் பாதுகாப்பு முறைமைகளைப் பலப்படுத்துவதற்கும், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாப்பதற்குமான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு விசேட முக்கியத்துவம் அளித்து, இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இக்கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது. சிங்கப்பூரின் தொழிற்முறை கல்வியை மேம்படுத்துவதில் அந்நாட்டு ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் அவர்கள் ஆற்றிய முக்கிய பங்கைக் கருத்திற்கொண்டு, அந்த அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வதில் இலங்கை கொண்டுள்ள ஆர்வத்தைப் பிரதமர் இதன்போது வெளிப்படுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையே இந்த அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பொருட்டு, சாத்தியமான கண்காணிப்புக் கள விஜயம் ஒன்றின் அவசியம் குறித்தும் இக்கலந்துரையாடலின்போது முன்மொழியப்பட்டது.

மேலும், ’A.P. Moller Holding’ நிறுவனத்தின் தலைவர் ரொபர்ட் எம். உக்லா (Robert M. Uggla) அவர்களையும் பிரதமர் சந்தித்தார். இந்த உரையாடலானது தனியார் துறையுடனான ஈடுபாடு மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைந்திருந்தது.

இந்தச் சந்திப்புகள் இலங்கையின் மீட்சி, அபிவிருத்தி மற்றும் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக சர்வதேசப் பங்காளிகள் மற்றும் உலகளாவிய தரப்பினருடன் இலங்கை தொடர்ந்து முன்னெடுத்து வரும் இராஜதந்திர உறவுகளைப் பிரதிபலிக்கின்றன.

பிரதமர் ஊடகப் பிரிவு